இந்தியா மீண்டும் சாதனை... 'அக்னி-4' ஏவுகணை சோதனை வெற்றி!
ஒடிசாவில் நடைபெற்ற 'அக்னி-4' நடுத்தர தூர பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக முடிவடைந்து, இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் அணு ஆயுதத் தடுப்புத் திறனில் மீண்டும் ஒரு மைல்கல்லை எட்டியுள்ளது. ஒடிசா மாநிலம் சந்திபூரில் உள்ள ஒருங்கிணைந்த ஏவுதளத்தில் இருந்து இந்த ஏவுகணை வெற்றிகரமாக ஏவப்பட்டது.
இந்திய ராணுவத்தின் மூத்த மற்றும் முக்கியப் பிரிவான 'ஸ்டிராட்டஜிக் போர்சஸ் கமாண்ட்' இந்தச் சோதனையை முன்னின்று நடத்தியது. சோதனையின் போது ஏவுகணையானது தனது அனைத்துத் தொழில்நுட்ப மற்றும் செயல்பாட்டு அளவுகோல்களையும் துல்லியமாக எட்டி, நிர்ணயிக்கப்பட்ட இலக்கைச் சரியாகத் தாக்கி அழித்தது. இந்த ஏவுகணை சுமார் 4,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள எதிரி நாட்டு இலக்குகளை மிகவும் துல்லியமாகத் தாக்கும் வல்லமை கொண்டது.

2 நிலைகளைக் கொண்ட திண்ம எரிபொருள் தொழில்நுட்பத்தில் இயங்கும் இந்த ஏவுகணை, மொபைல் லாஞ்சர் மூலம் எளிதில் நகர்த்திச் சென்று ஏவக்கூடிய வடிவமைப்பைக் கொண்டது.
அணு ஆயுதங்கள் மற்றும் சாதாரண வெடிபொருட்களைச் சுமந்து செல்லும் திறன், ரிங் லேசர் கைரோஸ்கோப் அடிப்படையிலான வழிகாட்டுதல் அமைப்பு மற்றும் அதிவெப்பத்தைத் தாங்கும் திறன் கொண்ட மறுபிரவேசக் கவசம் ஆகியவற்றை இது உள்ளடக்கியுள்ளது. இந்த வெற்றிகரமான சோதனை, இந்தியாவின் "நம்பகமான குறைந்தபட்ச தடுப்புத் திறனை" மேலும் வலுப்படுத்தியுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.
