நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் தோல்வி - பதவியை இழந்த இந்தியாவின் மிக இளம் நகராட்சித் தலைவர்!

 
நகராட்சி

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள பாலா நகராட்சியின் தலைவராகப் பதவி வகித்து வந்த தியா பானு (21), நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் தோல்வியடைந்து தனது பதவியை இழந்துள்ளார்.

சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் பாலா நகராட்சியில் நிலவிய தொங்கு மன்றச் சூழல் தியா பானுவுக்கு தலைவராகும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. பாலா நகராட்சியின் மொத்தம் உள்ள 26 வார்டுகளில் இடதுசாரி முன்னணி 12 இடங்களிலும், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 10 இடங்களிலும் வெற்றி பெற்றன.

மீதமுள்ள 4 வார்டுகளில் 21 வயதேயான தியா பானு மற்றும் அவரது தந்தை உட்பட சுயேச்சைகள் வெற்றி பெற்றிருந்தனர். நகராட்சியைக் கைப்பற்ற சுயேச்சை வேட்பாளரான தியா பானுவுக்கு ஆதரவளிக்கக் காங்கிரஸ் கூட்டணி முடிவு செய்தது. இதன் மூலம் தியா பானு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, இந்தியாவிலேயே மிகக் குறைந்த வயதில் நகராட்சித் தலைவரானவர் என்ற வரலாற்றுப் பெருமையைப் பெற்றார்.

பதவியேற்ற சில காலத்திலேயே அரசியல் நகர்வுகளால் அவரது பதவிக்குச் சிக்கல் உருவானது. தியா பானுவின் நிர்வாகத்திற்கு எதிராக இடதுசாரி முன்னணி சார்பில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில் தீர்மானத்திற்கு ஆதரவாக 17 வாக்குகள் பதிவானதால், தியா பானு தனது தலைவர் பதவியை இழந்தார். நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் கட்சிக்கு எதிராகச் செயல்பட்டு ஆதரவாக வாக்களித்தத் தங்களது கட்சியின் 4 கவுன்சிலர்களைக் காங்கிரஸ் தலைமை உடனடியாகக் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.