இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்... அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியா வருகிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப்!
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள சூழலில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அடுத்த ஆண்டு (2027) தொடக்கத்தில் இந்தியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
டெல்லியில் அண்மையில் நடைபெற்ற இருதரப்புப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, இந்தியா-அமெரிக்கா இடையேயான இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் இறுதி வடிவத்தைப் பெற்றுள்ளதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் பரஸ்பர லாபத்தை அளிக்கும் வகையில் இந்த ஒப்பந்தத்தின் இறுதி விதிகள் வடிக்கப்பட்டு வருகின்றன.
அமெரிக்க அதிபரின் இந்தியப் பயணம் மற்றும் இருநாட்டு உறவுகள் குறித்து அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ மற்றும் இந்தியாவிற்கான அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர் ஆகியோர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ள முக்கிய விபரங்களின்படி, பிரான்சில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டின் பக்கவாட்டில் பிரதமர் நரேந்திர மோடியும், அதிபர் டொனால்டு டிரம்பும் நடத்திய ஒரு மணி நேரத்திற்கும் மேலான விரிவான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2027-ஆம் ஆண்டு தொடக்கத்தில் டிரம்ப் இந்தியா வரவுள்ளார்.

அதிபர் டிரம்பின் வருகைக்கான தூதரகக் களப்பணிகளைச் மேற்கொள்வதற்காக, இந்த ஆண்டு இறுதிக்குள் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ தனிப்பட்ட முறையில் மீண்டும் இந்தியா வரத் திட்டமிட்டுள்ளார்.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ இருநாட்டுத் தலைவர்களின் உறவு குறித்துப் பேசுகையில், "பிரதமர் மோடி மற்றும் அதிபர் டிரம்ப் இடையேயான தனிப்பட்ட நட்பு இரு நாடுகளின் ராஜதந்திர உறவுகளுக்கும் மிக வலுவான அடித்தளமாகும். சர்வதேச அரசியலில் அமெரிக்காவின் மிக நெருங்கிய மற்றும் நம்பகமான கூட்டாளியாக இந்தியா திகழ்கிறது. வரவிருக்கும் குவாட் (Quad) தலைவர்கள் மாநாட்டிலும் இருநாடுகளும் இணைந்து உலகளாவிய பாதுகாப்பு மற்றும் விநியோகச் சங்கிலி மேம்பாட்டில் முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளன" எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதிபர் டொனால்டு டிரம்ப் தனது இரண்டாவது அதிபர் பதவிக்காலத்தில் இந்தியாவிற்கு மேற்கொள்ளவிருக்கும் முதல் அதிகாரப்பூர்வப் பயணம் இதுவாகும். பாதுகாப்பு, எரிசக்தி, தொழில்நுட்பம் மற்றும் வர்த்தகம் ஆகிய நான்கு முக்கியத் தூண்களை மையமாகக் கொண்டு இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கப் பயணம் அமையவுள்ளதாக வாஷிங்டன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
