விமானத்தில் பெண்ணுக்கு திடீர் மயக்கம்... ராய்ப்பூரில் விமானம் அவசர அவசரமாக தரையிறக்கம்!

 
இண்டிகோ இண்டிகோ

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் இருந்து மகாராஷ்டிராவின் புனே நோக்கி இன்று இண்டிகோ நிறுவனத்திற்குச் சொந்தமான 6இ-135 என்ற எண் கொண்ட விமானம் புறப்பட்டுச் சென்றது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது அதில் பயணம் செய்த பெண் பயணி ஒருவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயக்கமடைந்தார். இதனால் விமானத்தில் இருந்த சக பயணிகள் மற்றும் ஊழியர்களிடையே பெரும் பதற்றம் நிலவிய சூழலில் விமானத்தை உடனடியாக தரையிறக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

பெண் பயணி சுயநினைவை இழந்ததைத் தொடர்ந்து விமானி உடனடியாக சத்தீஷ்கார் மாநிலத் தலைநகர் ராய்ப்பூரில் உள்ள சுவாமி விவேகானந்தா விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகளைத் தொடர்பு கொண்டார். அவசரகால மருத்துவ உதவி தேவைப்பட்டதால் ராய்ப்பூர் விமான நிலையத்தில் விமானத்தை அவசரமாகத் தரையிறக்க அனுமதி கோரப்பட்டது. அதிகாரிகளின் அனுமதியைத் தொடர்ந்து விமானம் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்ட நிலையில் அந்தப் பெண்ணுக்கு விமான நிலையத்திலேயே முதலுதவி சிகிச்சைகள் உடனடியாக வழங்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து மயக்கமடைந்த பெண் பயணி ஆம்புலன்ஸ் மூலமாக ராய்ப்பூரில் உள்ள அருகாமையில் இருக்கும் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். இந்த மருத்துவ அவசர நிலை காரணமாக விமானப் பயணத்தில் சிறு தாமதம் ஏற்பட்டாலும் தேவையான நடைமுறைகள் அனைத்தும் விரைவாக முடிக்கப்பட்டன. நிலைமை சீரானதை அடுத்து மதியம் 1 மணியளவில் அந்த விமானம் மீண்டும் புனே நகரை நோக்கிப் புறப்பட்டுச் சென்றதாக விமான நிலைய அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளனர்.