"தனித்துப் போட்டி.. அதிமுக, பாஜக அழுத்தங்களுக்கு இடமில்லை - புதுச்சேரி வேட்பாளர்களை இறுதி செய்த விஜய்!
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களை இறுதி செய்துள்ளதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் தனது அரசியல் பயணத்தின் முதல் தேர்தலைத் தனித்துப் போட்டியிட்டு எதிர்கொள்ள முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.
புதுச்சேரியில் உள்ள 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தவெக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களிடம் நடத்தப்பட்ட நேர்காணல்கள் முடிவடைந்துள்ளன. இன்று புதுச்சேரி மாநிலத்திற்கான வேட்பாளர் பட்டியலை விஜய் இறுதி செய்துள்ளதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புதுச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ மற்றும் தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் ஆலோசனையின் பேரில், இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு அதிக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகளுடன் தவெக கூட்டணி அமைக்கக்கூடும் எனப் பரவலாகப் பேசப்பட்டு வந்தது. ஆனால்: எவ்விதக் கூட்டணியும் இன்றி, புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தவெக தனித்தே போட்டியிடும் என்பதில் விஜய் உறுதியாக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பெரிய கட்சிகளின் அழுத்தம் இருந்தபோதிலும், தனது கட்சியின் தனித்துவத்தை நிலைநாட்ட விஜய் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கருதப்படுகிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை, 234 தொகுதிகளுக்கும் தவெக நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர் அணி மூலம் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு ரகசியமாக வைக்கப்பட்டுள்ளனர். இந்த வாரம் அல்லது அடுத்த வாரத் தொடக்கத்தில் (வேட்புமனுத் தாக்கலுக்கு முன்) ஒட்டுமொத்தப் பட்டியலையும் விஜய் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் வட சென்னையின் ஏதேனும் ஒரு தொகுதியிலோ அல்லது மதுரையிலோ போட்டியிட வாய்ப்புள்ளதாக இன்னும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் உலவுகின்றன.
