BREAKING... 241 பயணிகளுடன் சென்ற கப்பல் திடீர் மாயம்... ஜாவா கடலில் பரபரப்பு !

 
இந்தோனேஷியா

 

ஜகார்த்தா: இந்தோனேசியாவில் 241 பயணிகளுடன் சென்ற பயணிகள் கப்பல் ஜாவா கடலில் திடீரென தொடர்பை இழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாயமான கப்பலை தேடும் பணியில் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள சுரபயா நகரில் இருந்து, தெற்கு கலிமந்தான் மாகாணத்தின் தலைநகரான பன்ஜர்மாசின் நகரை நோக்கி ‘விர்கோ டிரான்ஸ்போர்ட் 8’ என்ற பயணிகள் கப்பல் புறப்பட்டது.நேற்று காலை 10.13 மணியளவில் சுரபயாவில் இருந்து புறப்பட்ட இந்தக் கப்பல், இன்று அதிகாலை 2 மணியளவில் திடீரென தொடர்பை இழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கப்பலில் 241 பயணிகள் இருந்ததாக பயணிகள் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கப்பலில் பணியாளர்களும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜாவா கடலில் தேடுதல்

கப்பலின் கடைசியாக கிடைத்த தகவலின்படி, அது ஜாவா கடலில், பன்ஜர்மாசின் துறைமுகத்தில் இருந்து சுமார் 148 கிலோமீட்டர் தொலைவில் இருந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.இதையடுத்து பன்ஜர்மாசின் மீட்புக் குழுவினர் உடனடியாக தேடுதல் நடவடிக்கையை தொடங்கினர். கப்பல் கடைசியாக இருந்ததாகக் கருதப்படும் பகுதிக்கு மீட்புக் கப்பல் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

பயணிகளின் நிலை என்ன?

அதிக எண்ணிக்கையிலான பயணிகள் மற்றும் பணியாளர்கள் கப்பலில் இருந்ததால், மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.மாயமான கப்பலில் இருந்தவர்களுக்கு என்ன ஆனது என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் வெளியாகவில்லை. உயிரிழப்பு குறித்தும் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.