இந்தோனேசிய வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் முக்கிய ஆலோசனை!
இந்தியாவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தோனேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் சுகியோனோ, புதுடெல்லியில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இரு நாடுகளுக்கும் இடையேயான எட்டாவது கூட்டு ஆணையக் கூட்டத்திற்கு இவ்விரு அமைச்சர்களும் கூட்டாகத் தலைமை தாங்கினர். இந்த உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் இருதரப்பு உறவுகளை அடுத்தகட்டத்திற்கு எப்படிக் கொண்டு செல்வது என்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
இந்த முக்கிய சந்திப்பின் போது பாதுகாப்பு, கடல்சார் வணிகம், முதலீடுகள், மருந்துப் பொருட்கள் உற்பத்தி மற்றும் உணவுப் பாதுகாப்பு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவது குறித்து இரு தலைவர்களும் ஆழமான கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். மேலும், வர்த்தகம், டிஜிட்டல் இணைப்பு, உள்கட்டமைப்பு, கல்வி மற்றும் கலாச்சார உறவுகளை மேம்படுத்துவது குறித்தும், பிராந்திய அளவிலான தற்போதைய முக்கிய விவகாரங்கள் குறித்தும் இந்த கூட்டத்தில் விரிவாக விவாதித்து ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டது.

இந்தியாவிற்கும் இந்தோனேசியாவிற்கும் இடையே நீண்டகாலமாக நிலவி வரும் விரிவான மூலோபாயக் கூட்டாண்மை கடந்த சில ஆண்டுகளில் மிகச் சிறந்த வளர்ச்சியைக் கண்டுள்ளதாக அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதேபோல், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி விரைவில் இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரிற்கு மேற்கொள்ளவுள்ள அரசுமுறைப் பயணம், இரு நாட்டு மக்களுக்குமிடையே கூடுதல் நன்மைகளையும், புதிய வர்த்தக வாய்ப்புகளையும் நிச்சயம் பெற்றுத் தரும் என்று இந்தோனேசிய அமைச்சர் சுகியோனோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
