தாத்தாவை கிரிக்கெட் மட்டையால் அடித்துக்கொன்ற கல்லூரி மாணவி!

 
cricket

 

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் சிறுவயதில் நடந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பான ஆத்திரத்தில், தாத்தாவை கிரிக்கெட் மட்டையால் தாக்கி கொலை செய்ததாக கல்லூரி மாணவி ஒருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்தூர் ஏரோட்ரோம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 75 வயதான ஓய்வுபெற்ற சிறப்பு ஆயுதப்படை வீரர் தனது மனைவியுடன் வசித்து வந்தார். அவரது 20 வயது பேத்தி, தனது பெற்றோருடன் வேறு பகுதியில் வசித்து வந்தார்.

சம்பவத்தன்று இரவு மாணவி வீட்டுக்கு தாமதமாக வந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பெற்றோருடன் அவருக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஆத்திரத்தில் வீட்டில் இருந்த கிரிக்கெட் மட்டையை எடுத்துக்கொண்டு, சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ள தாத்தா-பாட்டி வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

அங்கு சென்றதும் பாட்டி கதவை திறந்துள்ளார். பின்னர் மாணவி நேராக தாத்தா தூங்கிக் கொண்டிருந்த அறைக்குச் சென்று, கிரிக்கெட் மட்டையால் அவரை பலமுறை தாக்கியதாக போலீசார் கூறுகின்றனர். சத்தம் கேட்டு பாட்டி அலறியதைத் தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் அங்கு வந்துள்ளனர்.

மருத்துவமனை ஆம்புலன்ஸ் போலீஸ் கொலை கத்திக்குத்து

படுகாயமடைந்த முதியவரை குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.விசாரணையின்போது, தனது சிறுவயதில் தாத்தா தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக மாணவி போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அப்போது இதுகுறித்து பெற்றோரிடம் தெரிவித்ததாகவும், அதன் பின்னர் குடும்பத்தினர் வேறு இடத்துக்கு குடிபெயர்ந்ததாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தன்று பெற்றோருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது, அந்த பழைய சம்பவம் மீண்டும் நினைவுக்கு வந்ததால் மாணவி ஆத்திரமடைந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.மாணவி கூறியுள்ள சிறுவயது துன்புறுத்தல் குறித்த குற்றச்சாட்டுகளையும், கொலைக்கான முழுமையான காரணத்தையும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். மாணவி தற்போது போலீஸ் விசாரணையில் உள்ளார்.