அதிமுகவில் வெடித்தது உட்கட்சிப் பூசல் - இபிஎஸ்ஸுக்கு எதிராக 9 முக்கியத் தலைவர்கள் போர்க்கொடி!
அதிமுக கட்சியிலிருந்து முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் விலகிய சில மணி நேரங்களிலேயே, அ.தி.மு.க-வின் மிக முக்கியத் தூண்களாகக் கருதப்படும் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் என 9 மூத்த தலைவர்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகக் கடிதம் அனுப்பியிருப்பது கொங்கு மற்றும் வடக்கு மண்டல அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி, நத்தம் ஆர்.விஸ்வநாதன் உள்ளிட்ட 9 முக்கியத் தலைவர்கள் இணைந்து கட்சியின் தலைமைக்கு ஒரு பரபரப்புக் கடிதத்தை அனுப்பியுள்ளனர். அதில் கட்சியின் தற்போதைய முக்கிய ஆளுமையான முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதற்குக் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு, பல்வேறு சவாலான காலகட்டங்களில் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் நாற்காலியிலும், அதன் பின்னர் கட்சியின் ஒற்றைத் தலைமையான பொதுச்செயலாளர் பதவியிலும் அமர வைப்பதற்குக் களத்தில் நின்று முன்னிருத்தியவர் சி.வி.சண்முகம்தான் என்பதை இக்கடிதத்தில் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கட்சியின் வளர்ச்சிக்கும், சட்டப் போராட்டங்களுக்கும் முக்கியப் பங்காற்றிய சி.வி.சண்முகத்தைத் தற்போதைய தலைமை திட்டமிட்டு ஒதுக்கி வைப்பதையும், அவரது கருத்துக்களைப் புறக்கணிப்பதையும் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவர்கள் தங்களது கடிதத்தில் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளனர்.

தலைமைக்கு அனுப்பப்பட்டுள்ள இந்த எதிர்ப்புக் கடிதத்தில் அதிமுகவின் மண்டல வாரியான செல்வாக்கு மிக்க தலைவர்கள் கையெழுத்திட்டுள்ளனர். எஸ்.பி.வேலுமணி (முன்னாள் அமைச்சர்), பி.தங்கமணி (முன்னாள் அமைச்சர்), நத்தம் ஆர்.விஸ்வநாதன் (முன்னாள் அமைச்சர்), கே.சி.வீரமணி (முன்னாள் அமைச்சர்), கே.பி.அன்பழகன் (முன்னாள் அமைச்சர்), பாலகிருஷ்ணரெட்டி (முன்னாள் அமைச்சர்), அருண்மொழித்தேவன் (சட்டமன்ற உறுப்பினர்) உட்பட மொத்தம் 9 முக்கிய நிர்வாகிகள் இந்த ஒருங்கிணைந்த முடிவை எடுத்துள்ளனர்.
திருப்பூர் மாநகர உட்கட்சிப் பூசலால் எம்.எஸ்.எம். ஆனந்தன் கட்சியை விட்டு வெளியேறிய நிலையில், எடப்பாடி பழனிசாமியின் சொந்தப் பாசறையைச் சேர்ந்த கொங்கு மற்றும் வட மாவட்டத் தலைவர்களே அவருக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியிருப்பது அ.தி.மு.க-வின் எதிர்காலத் தலைமைத்துவத்திற்குப் பெரும் முட்டுக்கட்டையாகக் கருதப்படுகிறது.
