காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு - பெற்றோரை விஷ ஊசி செலுத்தி கொன்ற நர்ஸ் தற்கொலை!
தெலுங்கானா மாநிலம் விகாரபாத் மாவட்டத்தைச் சேர்ந்த சுரேகா என்ற பெண், சங்கரெட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வந்தார். அங்கு வாலிபர் ஒருவரைக் காதலித்து வந்த நிலையில், இவர்களது திருமணத்திற்கு சுரேகாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த சுரேகா, பெற்றோர் தூங்கிக் கொண்டிருந்த சமயம் பார்த்து அவர்களுக்கு விஷ ஊசி செலுத்தி கொடூரமாகக் கொலை செய்தார். பெற்றோர் உடல்நலக் குறைவால் இறந்ததாக நாடகமாடிய போதிலும், காவல்துறையினரின் தீவிர விசாரணையில் உண்மை வெளிப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையில் இருந்த சுரேகா கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தார். தொடர்ந்து சங்கரெட்டி சாந்தி நகரில் உள்ள ஒரு விடுதியில் அறை எடுத்துத் தங்கியுள்ளார். நீண்ட நேரமாகியும் அறை திறக்கப்படாததால் விடுதி ஊழியர்கள் அளித்த தகவலின் பேரில், காவல்துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்குச் சுரேகா தனக்குத்தானே விஷ ஊசி செலுத்திக் கொண்டு பிணமாகக் கிடந்தது கண்டறியப்பட்டது.சடலத்தைக் கைப்பற்றிய காவல்துறையினர் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, இச்சம்பவம் குறித்துத் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
