போர்ச்சுகல் நகரைச் சென்றடைந்த இந்தியாவின் ஐஎன்எஸ் சுதர்ஷினி!
Updated: Aug 24, 2026, 11:02 IST
இந்திய கடற்படையின் பாய்மரப் பயிற்சிக் கப்பலான 'ஐஎன்எஸ் சுதர்ஷினி', தனது 'லோக்காயன் 26' உலகளாவிய கடல் பயணத்தின் ஒரு பகுதியாகப் போர்ச்சுகல் நாட்டின் லிஸ்பன் நகரைச் சென்றடைந்துள்ளது.
மூன்று பாய்மரங்களுடன் தாகஸ் நதியில் நுழைந்த இக்கப்பலின் வீரர்கள், தங்களின் பாரம்பரியப் படகோட்டும் திறன்களை வெளிப்படுத்தி அங்குள்ளவர்களை வியப்பில் ஆழ்த்தினர். இப்பயணத்தின் போது இருநாட்டு கடற்படை அதிகாரிகளின் சந்திப்புகள், தொழில்முறை பரிமாற்றங்கள் மற்றும் கலாச்சார நிகழ்வுகள் நடைபெற உள்ளதாகக் கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சர்வதேச அளவில் நட்புறவை மேம்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்தப் பயணத்திற்குப் பல்வேறு தரப்பினரிடமிருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
