அரசுப் பேருந்துகளில் சோதனை... டிக்கெட் இன்றி பயணித்த 4,476 பேருக்கு ரூ.8.94 லட்சம் அபராதம் விதிப்பு!

 
கர்நாடக கர்நாடகா அரசு பேருந்து

கர்நாடக மாநில அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் டிக்கெட் எடுக்காமல் பயணிப்பவர்களைக் கண்டறியும் வகையில், கடந்த மே மாதம் முழுவதும் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகளிடம் இருந்து சுமார் ரூ.9 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் முழுவதும் கர்நாடக மாநிலம் முழுவதும் இயக்கப்பட்ட அரசுப் பேருந்துகளில் நடத்துநர்கள் மற்றும் பயணிகளைச் சரிபார்க்கும் சிறப்புப் பறக்கும் படையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்த தணிக்கையின் போது, மாநிலம் முழுவதும் மொத்தம் 42,512 பேருந்துகள் வழிமறிக்கப்பட்டு, பயணிகளின் டிக்கெட்டுகள் மற்றும் மாதாந்திர பாஸ்கள் துல்லியமாக ஆய்வு செய்யப்பட்டன.

இந்த ஒரு மாத காலத் தீவிர சோதனையின் போது, முறையான பயணச்சீட்டு இன்றிப் பயணித்த ஆயிரக்கணக்கான பயணிகள் பிடிபட்டனர். பேருந்துகளில் டிக்கெட் எடுக்காமலும், உரியக் கட்டணத்தைக் செலுத்தாமலும் அஜாக்கிரதையாகப் பயணித்த 4,476 பயணிகள் அதிகாரிகளிடம் கையும் களவுமாகச் சிக்கினர். அவர்களிடம் இருந்து மொத்தம் ரூ.8.94 லட்சம் அபராதத் தொகையாக வசூலிக்கப்பட்டு, அரசுப் போக்குவரத்துக் கழகக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.

கர்நாடகா அரசு பேருந்து கே.எஸ்.ஆர்.டி.சி.கேஎஸ்ஆர்டிசி

அதிகாரிகளின் இந்த தொடர் மற்றும் தீவிரமான சோதனை நடவடிக்கைகளின் காரணமாக, கர்நாடக அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்குப் பயணிகளால் ஏற்படவிருந்த சுமார் ரூ.1.52 லட்சம் வருவாய் இழப்பு முன்கூட்டியே கண்டறியப்பட்டுத் தடுக்கப்பட்டுள்ளதாகப் போக்குவரத்துத் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்கள் அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் போது தங்களது பயணப் பொறுப்பை உணர்ந்து, முறையான கட்டணத்தைச் செலுத்திப் பயணச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும், டிக்கெட் இன்றிப் பயணிப்பது சட்டப்படி குற்றமாகும் என்றும் போக்குவரத்துக் கழகம் மீண்டும் எச்சரித்துள்ளது. வரும் மாதங்களிலும் இந்த அதிரடிச் சோதனை மேலும் தீவிரப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.