சென்னையில் இன்ஸ்டா பிரபலம் 'பைனான்ஸ் வித் ஹரிஷ்' தற்கொலை - யூடியூபர் மீது தந்தை புகார்!
சென்னையில் இன்ஸ்டாகிராம் மூலம் நிதி தொடர்பான ஆலோசனைகளை வழங்கி வந்த பிரபல இன்ஃப்ளூயன்சர் ஹரிஷ், தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் 'பைனான்ஸ் வித் ஹரிஷ்' என்ற பெயரில் இன்ஸ்டாகிராம் பக்கம் நடத்தி வந்த ஹரிஷ், நிதி மற்றும் முதலீடுகள் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் ஆலோசனைகளை வழங்கி மக்களிடையே பரிச்சயமானவர். இந்நிலையில் அவர் திடீரெனத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தன் மகனின் இந்த விபரீத முடிவுக்கு யூடியூபர் ஜேசன் சாமுவேல் என்பவரே காரணம் என்று ஹரிஷின் தந்தை விநாயகம் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு யூடியூபர் ஜேசன் சாமுவேல் என்பவர் ஹரிஷ் குறித்து தனது சமூக வலைதளப் பக்கங்களில் அவதூறாகவும் தரக்குறைவாகவும் பேசியதாகவும், அதனால் ஏற்பட்ட மன உளைச்சலாலேயே ஹரிஷ் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளதாகவும் அந்தப் புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்ஸ்டா பிரபலம் தற்கொலை செய்து கொண்ட இந்தச் சம்பவம் குறித்துக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
