இன்ஸ்டாகிராம் பிரபலம் 3 குழந்தைகள் முன்னிலையில் கத்தியால் குத்திக் கொலை... கணவன் பரபரப்பு வாக்குமூலம்!
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் நகரில் சமூக வலைதளங்களில் மிகவும் புகழ்பெற்ற இன்ஸ்டாகிராம் மற்றும் சமூக வலைதள இன்ஃப்ளூயன்சரான நிஷா சவுகான் என்ற பெண்மணி வசித்து வந்தார். அவருக்கும் அவரது கணவருக்கும் இடையே கடந்த சில நாட்களாகக் குடும்பச் சொத்துக்களைப் பதிவு செய்வது தொடர்பாகக் கடுமையான தகராறுகளும், மனக்கசப்புகளும் நீடித்து வந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில் தங்களின் படுக்கையறையில் இருந்த நிஷாவிடம் சொத்து விபரங்கள் குறித்துக் கணவர் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது இருவருக்கும் இடையேயான தகராறு முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த கணவர் நிஷாவை படுக்கையறையிலிருந்து வீட்டின் ஹாலுக்கு வலுக்கட்டாயமாக இழுத்து வந்துள்ளார். அங்கிருந்த தங்களின் 3 கள்ளமில்லா பிஞ்சு குழந்தைகள் கண் முன்னரே, அவர் மறைத்து வைத்திருந்த கூர்மையான கத்தியை எடுத்து நிஷாவின் கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். குழந்தைகள் பயத்தில் அலறிய போதிலும் எவ்வித இரக்கமுமின்றி இந்த விபரீதச் செயலை அவர் செய்துள்ளார்.

நிஷா ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாகத் தனது உயிரை இழந்ததை அடுத்து, குற்ற உணர்வில் பதறிய கணவர் அதே கத்தியால் தனது உடலிலும் பலமுறை குத்திக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், இது குறித்து மீரட் போலீசாருக்கு உடனடியாகத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நிஷாவின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பியதோடு, படுகாயமடைந்த கணவரை மீட்டுப் பலத்த போலீஸ் காவலுடன் அரசு மருத்துவமனையில் அனுமதித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
