இன்ஸ்டாகிராமில் புதிய கட்டணச் சேவை அறிமுகம்... பயனர்களுக்கு கூடுதல் வசதிகள்!

 
இன்ஸ்டா இன்ஸ்டா

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான இன்ஸ்டாகிராம் செயலியை இந்தியாவில் மட்டும் சுமார் 45 கோடி மக்கள் பரவலாகப் பயன்படுத்தி வருகிறார்கள். ஆரம்பத்தில் புகைப்படங்களை மட்டுமே பகிர்ந்து கொள்ளும் தளமாக இருந்த இன்ஸ்டாகிராம், நாளடைவில் காணொளி வசதியையும், டிக் டாக் தடைக்குப் பிறகு ரீல்ஸ் எனப்படும் குறுங்காணொளி வசதியையும் அறிமுகம் செய்து இளைஞர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், பயனர்களை மேலும் கவரும் வகையில் 'இன்ஸ்டாகிராம் பிளஸ்' என்ற புதிய கட்டணச் சந்தா திட்டத்தை அந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த புதிய திட்டத்தின் கீழ் இணையும் பயனர்களுக்குக் கூடுதல் அம்சங்கள் மற்றும் தனித்துவமான விருப்பத் தேர்வுகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்புச் சேவைகள் வழங்கப்பட உள்ளன. இந்தச் சந்தா திட்டத்தைப் பயன்படுத்த விரும்புபவர்கள் மாதத்திற்கு ரூ. 299 கட்டணமாகச் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஸ்டாகிராம் பிளஸ் சேவை என்பது முற்றிலும் பயனர்களின் தனிப்பட்ட விருப்பத்தேர்வு மட்டுமே எனவும்  சாதாரண முறையில் இலவசமாகப் பயன்படுத்துபவர்களுக்கு இதில் எந்தவித மாற்றமும் இருக்காது எனவும் நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.

இன்ஸ்டா

கூடுதல் அனுபவத்தையும் பிரத்யேக வசதிகளையும் விரும்பும் மக்களுக்காக மட்டுமே இந்த பிரீமியம் சேவை பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்தச் சந்தா மூலம், சாதாரண பயனர்களுக்குக் கிடைக்காத சில புத்தம் புதிய தொழில்நுட்ப அம்சங்களை முன்கூட்டியே பெற்றுப் பயன்படுத்த முடியும். மேலும், இன்ஸ்டாகிராம் நிறுவனம் எதிர்காலத்தில் கொண்டு வரவிருக்கும் சில புதிய சோதனை முயற்சிகளை, சாதாரணப் பயனர்களுக்கு முன்பாகவே இந்த பிளஸ் உறுப்பினர்கள் சோதித்துப் பார்க்கும் சிறப்பான வாய்ப்பும் வழங்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.