இன்ஸ்டாகிராம் காதல் விபரீதம்.... உல்லாசம் அனுபவித்து திருமணத்திற்கு மறுத்த வாலிபர் கைது!
தெலங்கானா மாநிலத்தில் சமூக ஊடகமான இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, திருமண ஆசை காட்டி 23 வயது இளம்பெண்ணை ஏமாற்றிய வாலிபரையும், அவருக்கு உடந்தையாக இருந்த அவரது தாயையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
தெலங்கானாவைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவருக்கு, இன்ஸ்டாகிராம் தளம் மூலமாக ராம்பாபு என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தத் நட்பு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதனைத் தொடர்ந்து, அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளைக் கூறிய ராம்பாபு, அவருடன் பலமுறை நெருக்கமாக இருந்துள்ளார்.
ஆனால், நாட்கள் செல்லச் செல்ல திருமணப் பேச்சை எடுத்தபோதெல்லாம் ராம்பாபு காலம் தாழ்த்தி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் அந்த இளம்பெண்ணைத் திருமணம் செய்ய முற்றிலும் மறுத்து, அவரை ஏமாற்றத் தொடங்கியுள்ளார்.

காதலன் தன்னை ஏமாற்றுவதை உணர்ந்த அந்த இளம்பெண், இதுகுறித்து நியாயம் கேட்டு அவர்களது ஊர் பஞ்சாயத்தில் உள்ள பெரியவர்களிடம் முறையிட்டுள்ளார். பஞ்சாயத்தினர் வாலிபர் ராம்பாபுவிடம் இதுகுறித்து விசாரித்துள்ளனர். தங்கள் மீது ஊர் பஞ்சாயத்தில் புகார் அளித்ததால் கடும் ஆத்திரமடைந்த ராம்பாபு மற்றும் அவரது தாய் விமலா ஆகிய இருவரும் சேர்ந்து, பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண்ணுக்கு நேரில் சென்று கடுமையான கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
தொடர்ந்து அச்சுறுத்தல் ஏற்பட்டதால், பாதிக்கப்பட்ட இளம்பெண் ஹைதராபாத்தில் உள்ள பஞ்சகுட்டா காவல் நிலையத்தில் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்தார்.
பெண்ணின் புகாரைப் பெற்றுக்கொண்ட பஞ்சகுட்டா போலீசார், உடனடியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதன்பேரில், திருமண ஆசை காட்டி மோசடி செய்த வாலிபர் ராம்பாபு மற்றும் பெண்ணைக் கொலை மிரட்டல் விடுத்து மிரட்டிய அவரது தாய் விமலா ஆகிய இருவரையும் போலீசார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர். சமூக வலைத்தளக் காதலால் இளம்பெண் ஏமாற்றப்பட்ட இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
