உணவுக்குப் பதில் டீ, காபி.. விமானக் கட்டணத்தைக் குறைக்கிறது ஏர் இந்தியா - புதிய 'பேசிக் ஃபேர்' திட்டம் அறிமுகம்!

 
ஏர் இந்தியா ஏர் இந்தியா

பொதுமக்கள் குறைந்த கட்டணத்தில் வான்வழிப் பயணம் மேற்கொள்வதை ஊக்குவிக்கும் நோக்கில், இந்தியாவின் முன்னணி விமானச் சேவை நிறுவனமான ஏர் இந்தியா, 'பேசிக் ஃபேர்' என்ற புதிய கட்டணக் குறைப்புத் திட்டத்தை உள்நாட்டு விமானச் சேவைகளில் சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயணிகளுக்கு வழங்கப்படும் பாரம்பரிய உணவுச் சலுகைகளில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

ஏர் இந்தியா விமானங்களில் இதுவரை பயணச் சீட்டின் கட்டணத்திலேயே பயணிகளுக்கான முழுமையான உணவு மற்றும் சிற்றுண்டிகள் வழங்கப்பட்டு வந்தன. தற்போதைய புதிய திட்டத்தின்படி, 'பேசிக் ஃபேர்' கட்டண முறையில் பயணிக்கும் பயணிகளுக்கு, விமானப் பயணத்தின் போது வழக்கமாக வழங்கப்படும் முழுமையான உணவுகளுக்குப் பதிலாகத் டீ அல்லது காபி மட்டுமே கட்டணமின்றி வழங்கப்படும்.

ஆப்கானிஸ்தானில் இருந்து 129 பயணிகளுடன் டெல்லி வந்தடைந்த‌து ஏர் இந்தியா விமானம்

பயணத்தின் போது முழுமையான உணவு தேவைப்படும் பயணிகள், அதற்கான கூடுதல் தொகையைச் செலுத்தி, தங்களது பயணச் சீட்டை முன்பதிவு செய்யும் போதோ அல்லது பயணத்திற்கு முன்னரோ உணவை முன்கூட்டியே கட்டாயமாக முன்பதிவு (ப்ரீ-புக்) செய்து கொள்ள வேண்டும்.

உணவு முறையில் கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டாலும், பயணிகளின் லக்கேஜ் கொண்டு செல்லும் விதிகளில் எவ்விதக் குறைப்பும் செய்யப்படவில்லை என்று ஏர் இந்தியா நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது:

"பயணிகள் தங்களது விமானப் பயணங்களின் போது அனுமதிக்கப்படும் வழக்கமான இலவச லக்கேஜ் எடைக் கட்டுப்பாட்டுச் சலுகைகளில் (செக்-இன் மற்றும் கேபின் லக்கேஜ்) எந்தவொரு மாற்றமும் செய்யப்படவில்லை. பழைய விதிகளின்படியே சாமான்களைப் பயணிகள் எவ்வித கூடுதல் கட்டணமுமின்றி எடுத்துச் செல்லலாம்."

ஏர் இந்தியா

எதிர்பாராத எரிபொருள் விலை உயர்வு மற்றும் விமான இயக்கச் செலவுகளை ஈடுகட்டவும், பட்ஜெட் விலையிலான விமானச் சேவைகளுடன் சந்தையில் போட்டியிடவும் ஏர் இந்தியா இம்முடிவை எடுத்துள்ளது.

தற்போது இந்த 'பேசிக் ஃபேர்' புதிய முறையானது இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு இடையேயான உள்நாட்டு விமானச் சேவைகளில் மட்டுமே சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் கிடைக்கும் பயணிகளின் வரவேற்பு மற்றும் கருத்துக்களைப் பொறுத்து, அடுத்தகட்டமாக இத்திட்டத்தைச் சர்வதேச மற்றும் பிற விமானச் சேவைகளுக்கும் விரிவுபடுத்துவது குறித்து ஏர் இந்தியா நிறுவனம் இறுதி முடிவு எடுக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.