இன்டெல் பென்டியம் செயலியை உருவாக்கிய அவ்தார் சைனி சாலை விபத்தில் உயிரிழந்தார்!

 
அவ்தார் சைனி

இன்டெல் பென்டியம் செயலியின் வடிவமைப்பில் முன்னணியில் இருந்த இன்டெல் இந்தியாவின் முன்னாள் தலைவர் அவ்தார் சைனி, நவி மும்பையில் நடந்த சாலை விபத்தில் பரிதாபமாக காலமானார். 
68 வயதான அவ்தார் சைனி, நேற்று அதிகாலை நெருலில் உள்ள பாம் பீச் சாலையில் மற்றவர்களுடன் சைக்கிள் ஓட்டிக்  கொண்டிருந்த போது வேகமாக வந்த டாக்ஸி இவரது சைக்கிள் மீது மோதியது. அவ்தார் சைனி, பாதுகாப்புக்காக ஹெல்மெட் அணிந்திருந்த போதிலும், இந்த விபத்தில் சைனிக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டதால், அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக உடனடியாக அழைத்துச் சென்ற போது அவர் முன்னதாகவே உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. 

அவ்தார் சைனி

சைனியின் சைக்கிள் மீது மோதிய டாக்ஸியின் ஓட்டுநர் தப்பிச் செல்ல முற்பட்ட போது, உடனிருந்த சக சைக்கிள் வீரர்கள் அவரை மடக்கிப் பிடித்தனர். 
மும்பை, செம்பூர் பகுதியில் வசித்து வந்த சைனி, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தனது மனைவி காலமானதையடுத்து, தனியாக வசித்து வந்தார். சைனியின் பிள்ளைகள் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். 

அவ்தார் சைனி

இன்டெல் இந்தியாவின் தலைவர் கோகுல் வி சுப்ரமணியம், அவ்தார் சைனியின்  இழப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இந்தியாவில் இன்டெல் ஆர் & டி மையத்தை நிறுவுவதில் திரு.அவ்தார் சைனியின் அவரது முக்கிய பங்கையும், 1982 முதல் 2004 வரை அவரது பதவிக்காலத்தில் செயலி வடிவமைப்பில் அவர் ஆற்றிய பங்களிப்பு குறித்தும் தனது இரங்கல் செய்தியில் கோகுல் சுப்ரமணியம் கூறியுள்ளார்.

From around the web