தவெக கூட்டத்தில் உட்கட்சிப் பூசல்... பெண் நிர்வாகி ஆடை கிழிப்பு.. தாக்கப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதி!

 
தவெக பெண்

கோவை கணியூர் பகுதியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின்உள்விவகாரக் கூட்டம் ஒன்றில், அக்கட்சியின் பெண் நிர்வாகி ஒருவர் சக நிர்வாகிகளால் தாக்கப்பட்ட சம்பவம் உள்ளூர் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சூலூர் தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. சுகுமார் தலைமையில், கணியூரில் கட்சியின் சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, கட்சியின் பெண் நிர்வாகி ஒருவர் மேடையில் இருந்த எம்.எல்.ஏ. சுகுமாருக்கு மாலை அணிவித்து வாழ்த்து கூற முயன்றுள்ளார். அப்போது அங்கிருந்த சக நிர்வாகிகள் சிலர், அந்தப் பெண்ணை மாலை அணிவிக்க விடாமல் திடீரென தடுத்து நிறுத்தியதாகக் கூறப்படுகிறது.

மாலை அணிவிப்பது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம், அடுத்த சில நிமிடங்களில் கைகலப்பாக மாறியது. இதில் சக நிர்வாகிகள் சிலர் அந்தப் பெண் நிர்வாகியைத் தகாத வார்த்தைகளால் திட்டி, சரமாரியாகத் தாக்கியதுடன் அவரது ஆடையையும் கிழித்ததாகத் தெரிகிறது.

இந்தத் திடீர் தாக்குதலில் படுகாயமடைந்த அந்தப் பெண் நிர்வாகி, அங்கிருந்தவர்களால் உடனடியாக மீட்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உட்கட்சிப் பூசலின் உச்சக்கட்டமாக அரங்கேறிய இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக, பாதிக்கப்பட்ட பெண் நிர்வாகி மருத்துவமனையிலிருந்தபடியே கட்சியின் தலைமை மற்றும் மேலிட நிர்வாகிகளுக்கு விரிவான புகார் அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாகத் த.வெ.க. தலைமை எடுக்கும் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து கட்சித் தொண்டர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.