சர்வதேச விளையாட்டு நகரம் திட்டம் கைவிடப்படவில்லை - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்!
சென்னை செம்மஞ்சேரியில் அமைக்கப்படவிருந்த சர்வதேச விளையாட்டு நகரம் திட்டம் கைவிடப்பட்டுவிட்டதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, அத்திட்டம் கைவிடப்படவில்லை என்றும் ஒலிம்பிக் தரத்திற்கு ஏற்ப மறுக்கட்டமைப்பு செய்யப்படவுள்ளதாகவும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சட்டப்பேரவையில் தெளிவுபடுத்தியுள்ளார்.
சென்னை செம்மஞ்சேரியில் திட்டமிடப்பட்டிருந்த சர்வதேச விளையாட்டு நகரம் தொடர்பான திட்டம் கைவிடப்பட்டதற்கான காரணம் என்னவென்று சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி இன்றைய கூட்டத்தொடரில் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்குப் பதிலளித்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, அந்தத் திட்டம் கைவிடப்படவே இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். மாறாக, உலகத் தரம் வாய்ந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் தரத்திற்கு இணையாக அத்திட்டம் மேலும் மேம்படுத்தப்பட்டு மறுக்கட்டமைப்பு செய்யப்படவுள்ளதாகக் கூறினார்.
இது குறித்த விரிவான மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் வெளியிடப்படும் என்றும் அவர் தனது பதிலில் குறிப்பிட்டார்.
