சர்வதேச புலிகள் தினம் | உலகளவில் புலிகள் பாதுகாப்பில் இந்தியா முன்னிலை... கின்னஸ் உலக சாதனை வரை மைல்கல்!

 
புலி

சர்வதேசப் புலிகள் தினத்தை முன்னிட்டு, அறிவியல் பூர்வமான கொள்கைகள் மற்றும் வலுவான நிர்வாகக் கட்டமைப்புகள் மூலம் உலகளவில் புலிகள் பாதுகாப்பில் இந்தியா முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. உலகில் காடுகளில் வாழும் புலிகளில் 75 சதவீதத்திற்கும் அதிகமான புலிகள் இந்தியாவில் மட்டுமே வாழ்கின்றன.

நாடு முழுவதும் புலிகளைப் பாதுகாக்கும் வகையில் 55-க்கும் மேற்பட்ட பிரத்யேகப் புலிகள் காப்பகங்கள் நிறுவப்பட்டுப் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

சர்வதேச அளவில் புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க நிர்ணயிக்கப்பட்ட சர்வதேச இலக்கை, இந்தியா தனது காலக்கெடுவுக்கு முன்பாகவே வெற்றிகரமாக எட்டி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

அதிர்ச்சி! வண்டலூர் பூங்காவில் 16 வயதான பீஷ்மர் வெள்ளை புலி உயிரிழப்பு!

இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 2006-ஆம் ஆண்டில் 1,411 ஆக மட்டுமே இருந்தது. ஆனால், 2022-ஆம் ஆண்டின் அகில இந்தியப் புலிகள் மதிப்பீட்டின்படி, புலிகளின் எண்ணிக்கை 3,682 ஆக அதிகரித்து இரட்டிப்பாகியுள்ளது.

2022-ஆம் ஆண்டின் இந்த பிரம்மாண்ட மதிப்பீடானது, நாட்டின் 20 மாநிலங்களில் சுமார் 6.41 லட்சம் கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று மேற்கொள்ளப்பட்ட உலகின் மிக விரிவான ஆய்வாகும்.

புலிகளின் உடலின் கோடுகளைக் கொண்டு ஒவ்வொரு புலியையும் துல்லியமாகக் கண்டறியும் அதிநவீன 'கேமரா டிராப்' வனவிலங்கு கணக்கெடுப்பு முறைக்காக, உலகின் மிகப்பெரிய வனவிலங்கு கண்காணிப்பு அமைப்பாக அங்கீகரிக்கப்பட்டு இந்தியா கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

மொபைல் செயலி மற்றும் செயற்கைக்கோள் வரைபடம், புவியியல் இருப்பிடம் ஆகியவற்றின் உதவியுடன் கள அளவில் துல்லியமான கண்காணிப்புத் தரவுகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

புலி

வங்கப் புலி 1972-ஆம் ஆண்டில் இந்தியாவின் தேசிய விலங்காக அறிவிக்கப்பட்டு, நாட்டின் வளம்மிக்க பல்லுயிர்ப் பெருக்கத்தின் முகமாக விளங்கி வருகிறது. உணவுச் சங்கிலியின் உச்சத்தில் இருக்கும் புலிகளைப் பாதுகாப்பது காடுகள், ஆறுகள் மற்றும் நிலத்தடி நீர் ஆதாரங்களைப் பாதுகாப்பதோடு, கிராமப் புற மற்றும் நகரப் பொருளாதாரத்திற்கான இயற்கை வளங்களையும் உறுதி செய்கிறது.

உலகளவில் புலிகள் மற்றும் பெரிய பூனை இனங்களைப் பாதுகாக்கும் சர்வதேசக் கூட்டாண்மையை வலுப்படுத்த, புலி, சிங்கம், சிறுத்தை, சிவிங்கிப்புலி, பனிச்சிறுத்தை, ஜாகுவார், பூமா ஆகிய 7 வகை விலங்கினங்களைப் பாதுகாக்க 'சர்வதேச பிக் கேட்ஸ் அலையன்ஸ்' அமைப்பை இந்தியா முன்னின்று தொடங்கியுள்ளது.

மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறையின் கீழ் 'புலிகள் திட்டம்' மூலம் 18 மாநிலங்களில் 84,500 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் காப்பகங்கள் நிறுவப்பட்டு, அவை தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தால் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.