'தமிழகத்தில் இன்று முழுவதும் இணையதள சேவைகள் இயங்காது'.. TNEB அறிவிப்பு!
மின்கட்டணம் செலுத்துதலை எளிமையாக்கும் நோக்கில் 'EB Auto Pay' என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்திய தமிழ்நாடு மின்சார வாரியம், தனது முக்கியத் தரவுத்தளங்களின் உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்புத் தன்மைகளை மேம்படுத்தும் பணிகளைத் தீவிரமாகத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக, இன்று ஒரு நாள் மட்டும் மின்சார வாரியத்தின் ஆன்லைன் சேவைகள் தற்காலிகமாகப் பாதிக்கப்படும் என நுகர்வோருக்கு அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்பப் பராமரிப்புப் பணிகள் இன்று காலை முதல் தொடங்கப்பட்டுத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இது குறித்து மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, மின்சார வாரியத்தின் முதன்மைத் தரவுத்தள அமைப்பை அடுத்தகட்டத் தொழில்நுட்பத் தரத்திற்குப் புதுப்பித்தல், தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான உயரழுத்த மின்நுகர்வோர் பில்லிங் மென்பொருள் மற்றும் கணக்கீட்டுக் கட்டமைப்பைப் பலப்படுத்துதல்.

இன்று நாள் முழுவதும் பராமரிப்புப் பணிகள் நீடிக்கும் என்பதால், மின்சார வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் (www.tnpdcl.org) மற்றும் கைபேசிச் செயலி ஆகியவற்றின் மூலமாக மேற்கொள்ளப்படும் டிஜிட்டல் சேவைகள் தற்காலிகமாக இயங்காது.
பொதுமக்கள் தங்களது வழக்கமான மாதாந்திர அல்லது இருமாத மின் பயன்பாட்டுக் கட்டணங்களை இணையதளம் வழியாக இன்று செலுத்த இயலாது. ஆன்லைன் மூலம் புதிய மின் இணைப்புகளுக்கு விண்ணப்பித்தல் மற்றும் பெயர் மாற்றப் பதிவுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. நுகர்வோர்கள் தங்களது முந்தைய கட்டணப் பட்டியல்கள் மற்றும் பயன்பாட்டு வரலாற்றை இணையத்தில் சரிபார்க்க முடியாது.

இன்று மின்கட்டணம் செலுத்துவதற்கான இறுதிக்காநாள் கொண்ட நுகர்வோர்கள், இணையதள முடக்கத்தின் காரணமாக ஏற்படும் தாமதத்திற்கு அபராதக் கட்டணங்கள் ஏதும் விதிக்கப்படுமா அல்லது காலக்கெடு நீட்டிக்கப்படுமா என்பது குறித்த கூடுதல் விவரங்களை அந்தந்தப் பகுதி மின்வாரிய அலுவலகங்கள் அல்லது 'மின்னகம்' நுகர்வோர் உதவி எண்கள் (94987 94987) மூலம் தொடர்புகொண்டு தெளிவுபடுத்திக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மென்பொருள் உள்கட்டமைப்புப் பணிகள் இன்று நள்ளிரவுக்குள் முழுமையாக நிறைவடைந்து, நாளை காலை முதல் அனைத்து ஆன்லைன் மற்றும் டிஜிட்டல் பில்லிங் சேவைகளும் வழக்கம் போல் தடையின்றி முழுமையாகச் செயல்படும் என மின்சார வாரியத் தொழில்நுட்பக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
