கள்ளக்காதலுக்கு இடையூறு.. கணவனை மது குடிக்க வைத்து கொன்ற மனைவி!
மைசூரு மாவட்டம் சரகூரு அருகே சாலையோரம் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி ஜவரப்பா (38) கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது மனைவி அம்ருதா மற்றும் மேஸ்திரி சித்தேஷ் ஆகியோரைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
கூலித் தொழிலாளியான ஜவரப்பா, சித்தேஷ் என்பவரிடம் மேஸ்திரி வேலை பார்த்து வந்தார். சித்தேசைத் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று மனைவி அம்ருதாவிற்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். இந்த அறிமுகம் நாளடைவில் அம்ருதா மற்றும் சித்தேஷ் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.

இவர்களின் கள்ளத்தொடர்பு ஜவரப்பாவிற்குத் தெரியவரவே, அவர் தனது மனைவியைக் கண்டித்துள்ளார். இதனால் தங்களது காதலுக்கு இடையூறாக இருக்கும் ஜவரப்பாவை ஒழித்துக்கட்ட அம்ருதாவும் சித்தேசும் திட்டம் தீட்டினர்.
கடந்த ஏப்ரல் 16-ஆம் தேதி, ஜவரப்பாவை மது குடிக்கலாம் என ஆசை வார்த்தை கூறி சித்தேஷ் தனது காரில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு ஜவரப்பாவிற்கு அதிக அளவில் மது கொடுத்து, அவர் மயக்கமடைந்த நிலையில் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். பின்னர், இது விபத்து போலத் தோன்றுவதற்காக உடலைச் சாலையோரம் வீசிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.

முதலில் இது விபத்து எனப் போலீசார் கருதினாலும், ஜவரப்பாவின் உடலில் இருந்த காயங்கள் சந்தேகத்தை ஏற்படுத்தின. தனிப்படை அமைத்து ஜவரப்பாவின் செல்போன் எண்களை ஆய்வு செய்தபோது, மனைவி அம்ருதாவின் பேச்சில் முரண்பாடுகள் இருந்தன. போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில், காதலன் சித்தேசுடன் சேர்ந்து கணவரைக் கொன்றதை அம்ருதா ஒப்புக்கொண்டார்.
தற்போது கைதான இருவரையும் சரகூரு போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்துள்ளனர்.
