உதயநிதி துணை முதல்வராக காங்கிரஸ் வரவேற்பு... செல்வப்பெருந்தகை பேட்டி!

 
செல்வப்பெருந்தகை
 

 

திருச்சி விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் தமிழக தலைவர் செல்வப்பெருந்தகை பேசுகையில், உதயநிதி துணை முதல்வராவதை காங்கிரஸ் வரவேற்கிறது என்றார். செய்தியாளர்களிடம் மேலும் பேசிய அவர், “ராகுல் காந்தியை பேசவிடாமல் தடுப்பதற்காக தொடர்ந்து அவதூறு, மிரட்டல் விடுத்து வரும் பாஜகவை கண்டித்தும், ஆர்எஸ்எஸ் திட்டங்களை கண்டித்தும் இண்டியா கூட்டணி சார்பில் மாபெரும் மாநாடு நடைபெற உள்ளது. 

உதயநிதி

அதில், முதல்வர் ஸ்டாலின் உட்பட இண்டியா கூட்டணி தலைவர்கள் அனைவரும் பங்கேற்பர். இண்டியா கூட்டணி இரும்புக் கோட்டைபோல வலிமையாக உள்ளது.

அரசியலில் உதயநிதி நன்கு பயிற்சி பெற்றிருக்கிறார். சிறப்பாகப் பணியாற்றி வருகிறார். அவர் துணை முதல்வராவதை காங்கிரஸ் வரவேற்கிறது. அவரை துணை முதல்வராக அறிவித்தால் மகிழ்ச்சி தான். பட்டியலின, மலைவாழ், பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்களுக்கு அரணாக இருப்பது ராகுல் காந்தி மட்டும் தான். அவர் மக்களின் குரலாக இருக்கிறார். எனவே தான், அவரது பேச்சு, கருத்துகளை சிதைக்க முயற்சிக்கிறார்கள். இதை ஒருபோதும் நாட்டு மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்.

ராகுல்

நடிகர் விஜய் அரசியல் வரவு திமுகவை பாதிக்காது. சட்டம்- ஒழுங்கை தமிழக முதல்வர் இரும்புக்கரம் கொண்டு பாதுகாத்து வருகிறார். காவல் துறையினரும் சிறப்பாகச் செயலாற்றி வருகின்றனர். இன்னும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்பது தான் எங்களது வேண்டுகோள். பழநி கோயில் பஞ்சாமிர்தத்தில் கலப்படம் என திரைப்பட இயக்குநர் மோகன்ஜி பேசியது கற்பனையானது. அதற்கு வாய்ப்பே இல்லை” என்றார்.

From around the web