கதறும் முதலீட்டாளர்கள்... பங்குச்சந்தையில் ஒரே நாளில் ₹8,00,000 கோடி காலி - டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ₹95.25ஆக வீழ்ச்சி!
இந்தியப் பங்குச்சந்தைகளில் இன்று காலை முதலே விற்பனை அழுத்தம் அதிகரித்ததால், சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகிய இரு குறியீடுகளும் வரலாறு காணாத சரிவைச் சந்தித்துள்ளன.
இன்றைய வர்த்தக நேரத்தின் முக்கிய நிலவரப்படி சென்செக்ஸ் 1,086 புள்ளிகள் வரை சரிந்து 76,674 என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது. நிஃப்டி 349 புள்ளிகள் வரை வீழ்ச்சியடைந்து 23,890 என்ற நிலையை எட்டியது. முன்னெப்போதும் இல்லாத வகையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ₹95.25 ஆகச் சரிந்து, நாட்டின் இறக்குமதிச் செலவை அதிகரித்துள்ளது.

பங்குச்சந்தையின் இந்தத் திடீர் வீழ்ச்சியால், மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு பெருமளவு குறைந்துள்ளது. இதன் மூலம் முதலீட்டாளர்களுக்கு இன்று ஒரே நாளில் மட்டும் சுமார் ₹8 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 10 கோடிக்கும் அதிகமான சிறு முதலீட்டாளர்கள் மற்றும் பெரும் நிறுவனங்கள் இந்தச் சரிவால் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கச்சா எண்ணெய் விலை உயர்வு: மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு $125-ஐத் தாண்டியுள்ளது. இது இந்தியாவின் பணவீக்கத்தை அதிகரிக்கும் என்ற அச்சத்தை உருவாக்கியுள்ளது.

கடந்த சில நாட்களாகவே அந்நிய நாட்டு முதலீட்டாளர்கள் இந்தியப் பங்குகளை விற்றுவிட்டு முதலீடுகளைத் திரும்பப் பெறுவது சந்தையை வலுவிழக்கச் செய்துள்ளது. அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதங்களில் மாற்றத்தைக் கொண்டு வரலாம் என்ற எதிர்பார்ப்பு உலகளாவிய சந்தைகளில் நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
