தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்துப் பேசிய ஐஓசி தலைவர்!
தமிழகத்தின் தொழில் வளர்ச்சி மற்றும் முக்கியப் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களை மேம்படுத்தும் நோக்கில், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யை, இந்தியாவின் முன்னணி பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் அர்விந்தர் எஸ்.சானி நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பின் போது, தமிழ்நாட்டில் தற்போது இந்தியன் ஆயில் நிறுவனம் மேற்கொண்டு வரும் பல்வேறு உள்கட்டமைப்புத் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது:
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஐஓசி நிறுவனம் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு, குழாய் வழி எரிவாயு விநியோகம் மற்றும் பசுமை ஆற்றல் திட்டங்களின் தற்போதைய முன்னேற்றங்கள் குறித்து முதலமைச்சரிடம் விளக்கப்பட்டது.
மாநிலத்தில் தொழில் வளர்ச்சியை மேலும் ஊக்கப்படுத்தும் விதமாக, அடுத்தகட்டமாக மேற்கொள்ளப்பட வேண்டிய புதிய முதலீடுகள் மற்றும் அதற்குத் தேவையான அரசின் உள்கட்டமைப்பு உதவிகள் குறித்தும் இரு தரப்பிலும் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. முதலமைச்சர் விஜய் மற்றும் ஐஓசி தலைவர் அர்விந்தர் எஸ்.சானி ஆகியோருடன் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய அதிகாரிகளும் உடனிருந்தனர்.
ஐஓசி நிறுவனத்தின் தென் மண்டல செயல் இயக்குநரும், தமிழ்நாடு மாநில தலைவருமான வி.சி.அசோகன் * நிறுவனத்தின் துணைப் பொது மேலாளர் பிரேம்குமார் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் இச்சந்திப்பில் பங்கேற்றுத் திட்ட வரைபடங்களை முதலமைச்சரிடம் சமர்ப்பித்தனர்.
