9% வரை ஐபோன் விலைகள் உயர வாய்ப்பு... ஆப்பிள் நிறுவனம் திடீர் முடிவு!

 
ஆப்பிள் ஐபோன் செல்போன்

உலக புகழ்பெற்ற ஆப்பிள் நிறுவனம், தனது வரவிருக்கும் புதிய ஐபோன் (18 ப்ரோ) மாடல்களின் விலையை அமெரிக்க டாலர் அடிப்படையில் சுமார் 9 சதவீதம் வரை உயர்த்தத் திட்டமிட்டுள்ளது. சந்தையில் நிலவும் கடுமையான உதிரிபாகங்கள் பற்றாக்குறை மற்றும் உற்பத்தி செலவு அதிகரிப்பு காரணமாக இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த விலை உயர்வு குறித்து ஆப்பிள் நிறுவனம் தனது அடிப்படை ப்ரோ மாடலின் விலையை 100 அமெரிக்க டாலர் வரை உயர்த்த உள்ளது. இதன் மூலம் இதன் ஆரம்ப விலை சுமார் $1,199 (இந்திய ரூபாய் மதிப்பு சுமார் ரூ.1,14,663) ஆக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகளவில் மெமரி சிப்கள் மற்றும் சிலிக்கான் செயலிகளின் தட்டுப்பாடு காரணமாக உற்பத்தி செலவு பெருமளவு அதிகரித்துள்ளதே இதற்கு முக்கியக் காரணமாகும்.

Leaked IPhone 18 Price: Pro Models Could Cost Up To $300 More

ஏற்கனவே ஆப்பிளின் முதன்மை போட்டியாளர்களான சாம்சங் மற்றும் கூகுள் நிறுவனங்கள் தங்களது புதிய தயாரிப்புகளின் விலையை 100 டாலர் வரை உயர்த்தியுள்ளன. மேலும், ஆப்பிள் நிறுவனம் தனது ஐபேட் மற்றும் மேக்புக் சாதனங்களின் விலையையும் உலக சந்தையில் கணிசமாக உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க டாலர் மதிப்பிற்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மற்றும் இறக்குமதி வரிகள் காரணமாக, இந்தியாவில் இதன் விலை உயர்வு இன்னும் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. எனினும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு செப்டம்பர் மாதம் நடைபெறும் ஆப்பிளின் மெகா வெளியீட்டு விழாவில் வெளியாகும் என தொழில்நுட்ப வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர்.