ஐபிஎல் 2026: மீளுமா சிஎஸ்கே? இன்று சேப்பாக்கத்தில் டெல்லி கேபிட்டல்ஸுடன் மோதுகிறது சென்னை!

 
டெல்லி கேபிட்டல்ஸ் ஐபிஎல் தோனி டெல்லி கேபிட்டல்ஸ் ஐபிஎல் தோனி

19-வது ஐ.பி.எல். தொடரின் விறுவிறுப்பான கட்டத்தில், இன்று இரவு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள 18-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. தொடர் தோல்விகளால் துவண்டுள்ள சென்னை அணி, தனது சொந்த மண்ணில் இன்று முதல் வெற்றியைப் பதிவு செய்யுமா என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

5 முறை ஐ.பி.எல். கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்த சீசன் சற்று சவாலாகவே தொடங்கியுள்ளது. ஆடிய முதல் மூன்று ஆட்டங்களிலும் (ராஜஸ்தான், பஞ்சாப், பெங்களூரு) தோல்வியைத் தழுவிய சிஎஸ்கே, தற்போது புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் நிலவும் குறைகளைக் களைந்து, சொந்த மைதானத்தில் இன்று வெற்றிக் கணக்கைத் தொடங்க வேண்டிய கட்டாயத்தில் அந்த அணி உள்ளது.

தோனி

மறுபுறம், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணி இந்த சீசனை அபாரமாகத் தொடங்கியது. மும்பை மற்றும் லக்னோ அணிகளை வீழ்த்திய அந்த அணி, கடந்த ஆட்டத்தில் குஜராத்திடம் கடைசி நேரத்தில் ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றியைத் தவறவிட்டது. அந்தப் பாதிப்பில் இருந்து மீண்டு, இன்று சென்னையை வீழ்த்தி மீண்டும் வெற்றிப்பாதைக்குத் திரும்ப அந்த அணி முனைப்புக் காட்டும்.

வரலாற்று ரீதியாகச் சென்னை அணி டெல்லியை விட வலுவாகவே உள்ளது. இது வரையிலான மொத்த மோதல்கள் 31 ஆட்டங்களாக இருக்கையில், சென்னை 19 வெற்றிகளை ருசித்துள்ளது. டெல்லி 12 வெற்றிகளைப் பெற்றுள்ளது.  சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இவ்விரு அணிகளும் இதுவரை 10 முறை மோதியுள்ளன. அதில் 7 முறை சென்னையும், 3 முறை மட்டுமே டெல்லியும் வெற்றி பெற்றுள்ளன. இந்த 'ஹோம் அட்வான்டேஜ்' இன்று சிஎஸ்கே-வுக்குக் கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிஎஸ்கே தோனி

இன்று சனிக்கிழமை என்பதால் இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. மாலை 3.30 மணிக்கு பஞ்சாப் கிங்ஸ் - ஐதராபாத் சன்ரைசர்ஸ் இடையிலான போட்டி நியூ சண்டிகாரிலும், இரவு 7.30 மணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேபிட்டல்ஸ் போட்டி சென்னை சேப்பாக்கத்திலும் நடைபெறுகிறது. 

மஞ்சள் உடை அணிந்த ரசிகர்களின் ஆரவாரத்தால் சேப்பாக்கம் மைதானமே இன்று அதிரப் போவது உறுதி. சென்னை அணி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்து ரசிகர்களுக்குத் தமிழ் புத்தாண்டு பரிசை முன்கூட்டியே வழங்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!