ஐபிஎல் பார்த்துக் கொண்டே சென்ற இளைஞர் காருடன் கிணற்றில் கவிழ்ந்து இளைஞர் பலி!
தெலங்கானா மாநிலம் ஜக்தியால் மாவட்டம் மொராபெல்லி பகுதி அருகே நேற்று இரவு ஒரு கார் சென்று கொண்டிருந்தது. அந்த காரை அருண் என்ற இளைஞர் ஓட்டிச் சென்ற நிலையில், அவருடன் நிவேஷ் மற்றும் அஸ்வின் ஆகிய இரு நண்பர்களும் பயணம் செய்துள்ளனர். அப்போது அவர்கள் தங்களின் காரில் சென்றுகொண்டே கைபேசி மூலமாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியைப் பார்த்துக் கொண்டே சென்றதாகக் கூறப்படுகிறது.
அப்போது கைபேசியில் கவனம் சிதறியதால், எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த கார் சாலையோரம் இருந்த ஒரு பெரிய விவசாயக் கிணற்றுக்குள் தலைகீழாகக் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின் போது காரில் இருந்த நிவேஷ் மற்றும் அஸ்வின் ஆகிய இரு இளைஞர்களும் நல்வாய்ப்பாகக் காரில் இருந்து வெளியில் குதித்து உயிர் தப்பினர். ஆனால் காரை ஓட்டிச் சென்ற அருண் என்ற வாலிபர் காரோடு கிணற்றுத் தண்ணீருக்குள் மூழ்கி பரிதாபமாக விபத்தில் சிக்கிக் கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் மீட்புக் குழுவினர் கிணற்றுக்குள் இறங்கி நீண்ட போராட்டத்தை நடத்தினர். சுமார் 2 மணி நேரக் கடுமையான போராட்டத்திற்குப் பிறகு, தண்ணீரில் மூழ்கிய காரையும் வாலிபர் அருணின் உடலையும் மீட்புக் குழுவினர் முறைப்படி வெளியே மீட்டெடுத்தனர். இந்தச் சோகமான விபத்து குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
