“கல்யாணம் ஆன பிறகும் விடலை... பெண் அதிகாரியின் பாலியல் தொல்லை” - ஐபிஎஸ் அதிகாரி தற்கொலை முயற்சி!
ஐதராபாத்தில் உள்ள தேசிய காவல் அகாடமியில் பயிற்சி பெற்று வரும் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர், சக பெண் அதிகாரியின் பாலியல் தொல்லை மற்றும் பொய்ப் புகார் காரணமாக விஷம் குடித்துத் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த உதய் கிருஷ்ணா ரெட்டி (28) என்பவர், ஆந்திரக் காவல்துறையில் காவலராகப் பணியாற்றி, பின்னர் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று ஐபிஎஸ் அதிகாரியாக உயர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்.
கர்நாடகாவைச் சேர்ந்த சக பயிற்சி பெண் அதிகாரி, உதய் கிருஷ்ணா மீது ஐதராபாத் காவல்துறையில் புகார் அளித்தார். அதில், உதய் கிருஷ்ணா தன்னை வலுக்கட்டாயமாக அறைக்கு இழுத்துச் சென்று தாக்கியதாகவும், ஆபாச வீடியோ அனுப்பி மிரட்டியதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து உதய் கிருஷ்ணாவிடம் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த விவகாரத்தால் மன உளைச்சலுக்கு ஆளான உதய் கிருஷ்ணா விஷம் குடித்துத் தற்கொலைக்கு முயன்றார். தற்போது அவர் தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில், தற்கொலைக்கு முன்பாக அவர் எழுதிய 2 பக்கக் கடிதம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண் அதிகாரியின் புகாரை முற்றிலும் மறுத்துள்ள உதய் கிருஷ்ணா, அந்தப் பெண் அதிகாரி திருமணத்திற்குப் பிறகும் பணி நேரத்தில் தன் அறைகுள் நுழைந்து செக்ஸ் ரீதியாகவும் உணர்வுபூர்வமாகவும் உறவைத் தொடர வற்புறுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார். பெண் அதிகாரியின் பாலியல் தொல்லையிலிருந்து தப்பிக்கவும் பாதுகாப்பு கருதியுமே அந்த வீடியோவை எடுத்து அவரது கணவருக்கு அனுப்பியதாகவும், மற்ற பயிற்சி அதிகாரிகளின் தூண்டுதலால் தன் மீது பொய்ப் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கடிதத்தில் தெரிவித்துள்ளார். இக்கடிதத்தின் அடிப்படையில் ஐதராபாத் காவல்துறையினர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
