இன்று ஈரான் - அமெரிக்கா மீண்டும் சமாதானப் பேச்சுவார்த்தை!

 
ஈரான் அமெரிக்கா ஈரான் அமெரிக்கா

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவி வந்த இடைக்கால போர் நிறுத்தம் இன்னும் 2 நாட்களில் முடிவுக்கு வர உள்ள நிலையில், வளைகுடா பிராந்தியத்தில் போர் பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது. சமீபத்தில் பாகிஸ்தானில் நடைபெற்ற இருதரப்பு நேரடிப் பேச்சுவார்த்தை, ஈரானின் அணு ஆயுதத் திட்டங்கள் குறித்த கருத்து வேறுபாட்டால் தோல்வியில் முடிந்தது. இதனால் ஆத்திரமடைந்த அமெரிக்கா, ஈரானின் முக்கியத் துறைமுகங்களை முற்றுகையிட்டதுடன், கடல் வழிப் போக்குவரத்தையும் முடக்கியுள்ளது.

ஈரான் இஸ்ரேல்

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் நீரிணையை ஈரான் மீண்டும் மூடியுள்ளது. அந்த வழியாகச் செல்ல முயன்ற கப்பல்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில், 2 இந்தியக் கப்பல்களும் சிக்கியதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளன. லெபனான் போர் நிறுத்தத்தைத் தொடர்ந்து ஹார்முஸ் நீரிணை திறக்கப்பட்டதை அமெரிக்க அதிபர் டிரம்ப் வரவேற்றாலும், ஈரான் மீதான முற்றுகையைத் தொடருவோம் என அறிவித்திருப்பது மோதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் ஈரான் அமெரிக்கா

இந்த இக்கட்டான சூழலில் போர் ஏற்படுவதைத் தவிர்க்க பாகிஸ்தான் அரசு மற்றும் ராணுவம் தற்போது தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனிர் நேரில் ஈரானுக்குச் சென்று அந்நாட்டுத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியதைத் தொடர்ந்து, அமெரிக்காவும் மீண்டும் பேச்சுவார்த்தைக்குச் சம்மதம் தெரிவித்துள்ளது. இருப்பினும், இரு நாடுகளுக்கும் இடையே கடும் முரண்பாடுகள் நீடிப்பதால் இன்று பாகிஸ்தானில் திட்டமிடப்பட்டுள்ள பேச்சுவார்த்தையில் ஈரான் பங்கேற்குமா என்பதில் பெரும் சந்தேகம் நிலவுகிறது