ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்... வளைகுடா பிராந்தியத்தில் வெடித்தது போர் பதற்றம்!

 
war

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நிலவி வந்த முரண்பாடுகள் மீண்டும் தீவிரமடைந்து மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் போர்ப் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கட்டுப்பாடுகளை மீறி ஹார்முஸ் நீரிணைப் பாதையைக் கடக்க முயன்ற வணிகக் கப்பல்கள் மீது ஈரான் படையினர் திடீர்த் தாக்குதல் நடத்தினர். இதனைத் தொடர்ந்து அமெரிக்க ராணுவப் படைகளைக் குறிவைத்து ஈரான் ஏவுகணைகளை வீசித் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியது. ஜோர்டான், சவுதி அரேபியா மற்றும் ஓமன் ஆகிய நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்கப் போர்ப்படைத் தளங்களை இலக்காகக் கொண்டு இந்தத் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டன.

உக்ரைன் கப்பல் ஈரான்

மேலும் ஈராக்கில் இருந்து சவுதி அரேபியாவிற்குள் ஊடுருவிய ஆயுதம் ஏந்திய கும்பல் மீது நடத்தப்பட்ட பதிலடித் தாக்குதலில் 20 பேர் உயிரிழந்தனர். அமெரிக்கப் போர்க்கப்பல்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டதால் ஆத்திரமடைந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையான எச்சரிக்கை விடுத்திருந்தார். எச்சரிக்கை விடுத்த சில மணி நேரங்களிலேயே ஈரானின் முக்கிய ராணுவ முகாம்களைக் குறிவைத்து அமெரிக்கப் படைகள் மீண்டும் கொடூர வான்வழித் தாக்குதல்களை நடத்தின. இந்தத் திடீர் ஏவுகணை வீச்சால் ஈரானின் பல ராணுவ அமைப்புகள் கடுமையாகச் சேதமடைந்து பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளன.

ஜோர்டான் ஈரான் அமெரிக்கா

அமெரிக்காவின் இந்த  தாக்குதலுக்கு ஈரான் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்து தக்க பதிலடி கொடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. தங்களது நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் எந்தவொரு நடவடிக்கைக்கும் அஞ்சப்போவதில்லை என அந்நாட்டு ராணுவம் உறுதியளித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையேயான இந்த மோதல் காரணமாக மத்திய கிழக்கு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளன. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு விலையேற்றம் ஏற்படும் அபாயம் நிலவுவதால் உலக நாடுகள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளன.