ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க ஈரான் ஒப்புதல் - பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பு!

 
ஹார்முஸ் ஜலசந்தி ஈரான் ஹார்முஸ் ஜலசந்தி ஈரான்

சர்வதேச கடல்வழிப் போக்குவரத்தில் மிக முக்கியமான வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் பாதுகாப்பாக இயக்க ஈரான் ஒப்புக்கொண்டுள்ளது. இதன் விளைவாக மத்திய கிழக்கில் நிலவி வந்த போர் பதற்றம் தணிந்து, உலக நாடுகளின் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு நீங்க வழிவகை ஏற்பட்டுள்ளது.

உலகிலேயே கச்சா எண்ணெய் போக்குவரத்தில் 20 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பை ஹார்முஸ் ஜலசந்தி கொண்டுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலுக்குப் பிறகு, ஈரானின் இந்த வழித்தட முடக்கம் காரணமாகச் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயர்ந்தது. இதனால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் சமையல் எரிவாயு (LPG) மற்றும் பெட்ரோல் தட்டுப்பாடு அபாயம் நிலவியது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் விடுத்த கடும் எச்சரிக்கையைத் தொடர்ந்து, பாகிஸ்தான் மேற்கொண்ட சமரச முயற்சிகளால் ஈரான் ஒரு படி இறங்கி வந்துள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தி பாரசீக வளைகுடா இந்தியக் கப்பல்

அனைத்து நாடுகளின் சரக்குக் கப்பல்கள் மற்றும் எண்ணெய் டேங்கர்கள் எவ்விதத் தடையுமின்றிச் செல்ல ஈரான் பாதுகாப்பு உத்தரவாதம் அளித்துள்ளது. ஈரானின் இந்தச் சாதகமான முடிவை அடுத்து, அந்நாட்டின் மீதான நேரடித் தாக்குதல்களை அடுத்த 14 நாட்களுக்கு (2 வாரங்கள்) நிறுத்தி வைக்க அதிபர் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டுள்ளார்.

இந்த ஒப்பந்தம் இந்தியாவிற்கு மிகப் பெரிய நிம்மதியைத் தந்துள்ளதாகப் பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர். இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் பெரும்பகுதி இந்த வழித்தடம் வழியாகவே வருகிறது. இதனால் இனி தடையின்றி எண்ணெய் விநியோகம் சீராகும்.

ஹார்முஸ்

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையத் தொடங்கும் என்பதால், வரும் நாட்களில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி சிலிண்டர் விலைகளில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. தேங்கிக் கிடந்த நூற்றுக்கணக்கான சரக்குக் கப்பல்களுக்கு தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், சர்வதேச வர்த்தகம் மீண்டும் வேகம் எடுக்கும்.

இந்த 2 வார கால அவகாசத்திற்குள் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஒரு நிரந்தர அமைதி ஒப்பந்தம் ஏற்படுமா என்பதை அறிய உலக நாடுகள் ஆவலுடன் இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தையை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றன.