அமெரிக்க ராணுவ தலைமையகம் மீது ஈரான் ஏவுகணை மழை - மத்திய கிழக்கில் உச்சக்கட்ட போர்!
ஈராக் நாட்டில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மற்றும் தலைமையகங்களை இலக்கு வைத்து ஈரான் இன்று அதிகாலை முதல் அதிரடித் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. இது உலக நாடுகளிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈராக்கின் குர்திஸ்தான் பிராந்தியத்தில் உள்ள அல்-ஹரீர் விமானப்படைத் தளம் மற்றும் மேற்கு ஈராக்கில் உள்ள ஐன் அல்-அசாத் ராணுவத் தளங்களைக் குறிவைத்து ஈரான் ஏவுகணைகளை ஏவியுள்ளது. ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படை இந்தத் தளங்கள் மீது குறைந்தது 5 ஏவுகணைகளை வீசித் தாக்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதலில் அமெரிக்கத் தரப்பில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து இன்னும் தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை. இருப்பினும், கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் வான்வழித் தாக்குதல்களில் ஈரான் ஆதரவு பெற்ற 'கதாயிப் இமாம் அலி' அமைப்பைச் சேர்ந்த 4 வீரர்கள் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரானின் உயர்மட்டத் தலைவர்கள் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. "அமெரிக்க ஆக்கிரமிப்புப் படைகளுக்கு இது ஒரு தகுந்த பாடம்" என்று ஈரான் அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
