"ஈரான் ஒருபோதும் போரை விரும்பியதில்லை!" - ஈரான் தூதர் முகமது பதலி உருக்கம்!

 
ஈரான் தூதர் முகமது பதலி ஈரான் தூதர் முகமது பதலி

மத்திய கிழக்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு இடையே, இந்தியாவுக்கான ஈரான் தூதர் முகமது பதலி டெல்லியில் அளித்துள்ள பேட்டி, சர்வதேச அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடனான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தும் வகையில் அந்த நாட்டுத் தூதர் முகமது பதலி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அமெரிக்கா ஈரான்

தற்போதைய போர்ச் சூழலைத் தணிக்கவும், அமைதியை நிலைநாட்டவும் பாரதப் பிரதமர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் எடுத்து வரும் முயற்சிகளை ஈரான் பாராட்டுவதாக அவர் தெரிவித்தார். "இந்தியா ஒரு பொறுப்புள்ள நாடு. மேற்காசியாவில் நிலவும் அசாதாரணச் சூழலைச் சீர்செய்ய இந்தியாவின் தலையீடு மிக அவசியம்," என அவர் குறிப்பிட்டார்.

ஈரான் ஒருபோதும் வலிந்து சென்று போரைத் தொடங்குவதில்லை என்பதை வலியுறுத்திய தூதர், அதே சமயம் ஒரு முக்கிய எச்சரிக்கையையும் விடுத்தார். "எங்கள் நாட்டின் எல்லைகளையோ அல்லது இறையாண்மையையோ யாராவது சீண்ட நினைத்தால், ஈரான் மௌனமாக இருக்காது. தக்க நேரத்தில் தகுந்த பதிலடி கொடுக்க நாங்கள் தயங்க மாட்டோம்," என அமெரிக்கா மற்றும் இஸ்ரேலைச் சுட்டிக்காட்டிப் பேசினார்.

ஈரான் அணு

போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறை குறித்து அவர் கவலை தெரிவித்தார்: உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் போன்ற அத்தியாவசியத் தேவைகள் பாதிக்கப்படுவதைத் தடுக்க உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். தற்போதைய பதற்றத்தால் ஏற்பட்டுள்ள உலகளாவிய விலைவாசி உயர்வு மற்றும் தட்டுப்பாட்டைச் சரிசெய்யக் கூட்டு முயற்சியே ஒரே தீர்வு என அவர் வலியுறுத்தினார்.