“யுரேனியம் செறிவூட்டலை நிறுத்தியது ஈரான்!” - டிரம்ப் அறிவிப்பு - புதைக்கப்பட்ட அணுசக்தி ‘தூசுகளை’ தோண்டியெடுக்கத் திட்டம்!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுடனான தற்காலிகப் போர்நிறுத்தத்தைத் தொடர்ந்து, அந்த நாட்டின் அணுசக்தித் திட்டம் குறித்த அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஈரான் மீதான வான்வழித் தாக்குதல்களை இரண்டு வாரங்களுக்கு அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ள நிலையில், ஈரானின் அணுசக்தி விவகாரம் தொடர்பாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் முக்கியத் தகவல்களைப் பகிர்ந்துள்ளார். ஈரானில் இனி யுரேனியம் செறிவூட்டப்படாது என்று டிரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற தாக்குதலுக்குப் பிறகு, ஈரான் தனது அணுசக்தி மையங்களைத் தொடவில்லை என்றும், அவை தற்போது செயற்கைக்கோள் மூலம் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் மீண்டும் யுரேனியம் செறிவூட்டலில் ஈடுபடக் கூடாது என்பது அமெரிக்காவின் முதன்மை நிபந்தனையாக உள்ளது. கடந்த ஆண்டில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய கூட்டு ராணுவ நடவடிக்கையின்போது, ஈரானின் நிலத்தடி அணுசக்தி மையங்கள் மீது பி-2 போர் விமானங்கள் மூலம் சக்திவாய்ந்த குண்டுகள் வீசப்பட்டன. அந்தத் தாக்குதலின் போது நிலத்தடியில் புதைந்த செறிவூட்டப்பட்ட யுரேனியம் மற்றும் அணுசக்தி மிச்சங்களை ஈரானுடன் இணைந்தே தோண்டியெடுத்து அகற்றப்போவதாக டிரம்ப் கூறியுள்ளார்.

இதன் மூலம் ஈரானிடம் அணு ஆயுதம் தயாரிக்கும் மூலப்பொருட்கள் எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்த அமெரிக்கா முயல்கிறது.
பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்த இந்த 14 நாள் போர்நிறுத்த ஒப்பந்தத்தின்படி, ஈரான் தனது ஹார்முஸ் ஜலசந்தியை சர்வதேச கப்பல் போக்குவரத்திற்காகத் திறந்துவிட்டுள்ளது. இந்த அமைதி ஒப்பந்தம் நீடித்தால் மட்டுமே பொருளாதாரத் தடைகளை நீக்குவது குறித்துப் பரிசீலிக்கப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. அதே சமயம், ஈரானின் புதிய தலைமை இந்த ஒப்பந்தத்திற்கு இசைந்துள்ளதாகவும், இது மத்திய கிழக்கில் நீண்ட காலப் அமைதிக்கு வழிவகுக்கும் என்றும் வெள்ளை மாளிகை நம்பிக்கை தெரிவித்துள்ளது.
