கண்ணீர் கடலில் ஈரான்... லட்சக்கணக்கில் திரண்ட மக்கள்... காமேனி மறைந்து 40 நாட்கள் - அதிபர் மசூத் உருக்கம்!

 
காமேனி காமேனி

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியின் 40-வது நாள் நினைவு தினம் நேற்று நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டது.

ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் உள்ள குடியரசு சதுக்கத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட நினைவு நிகழ்ச்சியில் அந்நாட்டின் அதிபர் மசூத் பெஜஸ்கியான் நேரில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார். பல்லாயிரக்கணக்கான மக்கள் தெருக்களில் திரண்டு, காமேனி மற்றும் அவரது குடும்பத்தினர் கொல்லப்பட்ட இடத்தை நோக்கி அமைதிப் பேரணியாகச் சென்றனர்.

ஈரான் காமேனி ட்ரம்ப்

மினாப் நகரில் உள்ள பள்ளியின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பலியான 180-க்கும் மேற்பட்ட பச்சிளம் குழந்தைகளின் நினைவாகவும் மெழுகுவர்த்தி ஏந்தி மக்கள் அஞ்சலி செலுத்தினர். இந்த இரங்கல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள், மறைந்த தலைவர் காமேனியின் கொள்கைகளைத் தொடர்ந்து பின்பற்றுவோம் என்றும், தேசத்தின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்காக எத்தகைய தியாகத்தையும் செய்யத் தயார் என்றும் உணர்ச்சிப்பூர்வமாக உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். ஈரானின் நூற்றுக்கணக்கான நகரங்களிலும் இதேபோன்ற நினைவேந்தல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

சுமார் 6 வாரங்கள் நீடித்த இந்தத் தீவிரத் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 2,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பாதுகாப்பு மந்திரி அமீர் நசீர்ஜடே மற்றும் புரட்சிகர காவல்படை தளபதிகளும் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஈரான்

தற்போது அமெரிக்கா அறிவித்துள்ள 2 வார காலத் தற்காலிகப் போர்நிறுத்தம் அமலில் உள்ள நிலையில், இந்த நினைவு நிகழ்ச்சிகள் எவ்விதப் பதற்றமும் இன்றி நடந்து முடிந்துள்ளன. இருப்பினும், இந்த அமைதி ஒப்பந்தம் நீடிக்குமா என்பது உலக நாடுகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.