"ஈரான் சரிவின் விளிம்பில் உள்ளது; எங்களிடம் கெஞ்சி வருகிறார்கள்" - டொனால்டு டிரம்ப்!

 
ட்ரம்ப் ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஈரான் அரசு தற்போது கடும் நெருக்கடியில் இருப்பதாகவும், அமெரிக்காவிடம் அவர்கள் உதவி கோரி வருவதாகவும் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று தனது 'ட்ரூத்' சமூக வலைத்தளத்தில் டிரம்ப் வெளியிட்ட பதிவின் படி, ஈரான் தற்போது ஒரு "சரிவு நிலையில்" (State of Collapse) இருப்பதாக அமெரிக்காவிற்குத் தகவல் தெரிவித்துள்ளது. அந்நாட்டில் நிலவும் தலைமைத்துவப் பிரச்சனைகளைச் சீர்செய்ய அவர்கள் முயற்சி செய்து வருவதாகவும், அதற்குள் ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க அமெரிக்கா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புவதாகவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

ட்ரம்ப்

ஈரானிய அரசாங்கத்திற்குள் நிலவும் கருத்து வேறுபாடுகளை அவர்களால் விரைவில் தீர்த்துக்கொள்ள முடியும் என்று தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஹார்முஸ் நீரிணை என்பது உலகளாவிய எண்ணெய் போக்குவரத்தில் மிக முக்கியமான ஒரு பாதையாகும். அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதல் காரணமாக இந்தப் பகுதியில் கடந்த பிப்ரவரி முதல் கடும் முற்றுகை நிலவி வருகிறது. இதனால் உலக அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. ஈரான் அதிகாரப்பூர்வமாக அமெரிக்காவுடன் நேரடிப் பேச்சுவார்த்தைக்குத் தயாரில்லை என்று கூறி வந்தாலும், பாகிஸ்தான் மற்றும் ஓமன் போன்ற நாடுகள் மூலம் ரகசியமாகப் பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ட்ரம்ப்

ஈரான் தரப்பில் இருந்து இத்தகைய செய்திகளை யார் வழங்கியது அல்லது அமெரிக்க அரசுக்கும் ஈரானுக்கும் இடையே நேரடித் தொடர்பு உள்ளதா என்பது குறித்து டிரம்ப் தரப்போ அல்லது வெள்ளை மாளிகையோ இதுவரை கூடுதல் விளக்கங்களை அளிக்கவில்லை. அதேசமயம், ஈரான் வரும் சில நாட்களில் ஒரு புதிய அமைதித் திட்டத்தை அமெரிக்காவிடம் சமர்ப்பிக்கக் கூடும் என்று சிஎன்என் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் இந்த அதிரடித் தாக்குதல்கள் மற்றும் பொருளாதாரத் தடைகளால் ஈரான் உண்மையிலேயே அடிபணிந்து வருகிறதா அல்லது இது டிரம்பின் வழக்கமான அரசியல் தந்திரமா என்பது வரும் நாட்களில் தெரியவரும்.