168 பள்ளிக் குழந்தைகள் உயிரிழந்த தாக்குதல்: அமெரிக்கா மன்னிப்பு கேட்கவில்லை என ஈரான் குற்றச்சாட்டு
ஈரானின் மினாப் நகரில் உள்ள தொடக்கப் பள்ளி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 168 குழந்தைகள் உயிரிழந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில், அமெரிக்க அரசு இதுவரை மன்னிப்பு கேட்கவில்லை என்று ஈரான் தலைமை மதகுருவின் இந்தியப் பிரதிநிதி அப்துல் மஜித் ஹகீம் இலாஹி தெரிவித்துள்ளார்.
தில்லியில் மத்திய கிழக்கு நாடுகளின் எதிர்காலம் குறித்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி மினாப் நகரில் உள்ள பள்ளி மீது நடத்தப்பட்ட தாக்குதலைச் சுட்டிக்காட்டினார். இந்தத் தாக்குதலில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பங்கள் இன்னும் துயரத்தில் இருப்பதாகவும், சில குழந்தைகளின் உடல்கள் இதுவரை கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
பள்ளி மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அமெரிக்கா மன்னிப்புக் கோராதது வருத்தமளிப்பதாகக் குறிப்பிட்ட இலாஹி, இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க உலக நாடுகள் குரல் கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மினாப் பள்ளித் தாக்குதல் தொடர்பாக அமெரிக்க ராணுவம் விசாரணை மேற்கொண்டது. ஆரம்பகட்ட விசாரணைத் தகவல்களின்படி, தாக்குதலுக்கு அமெரிக்கப் படைகள் காரணமாக இருந்திருக்கலாம் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இருப்பினும், அப்போது விசாரணையின் இறுதி முடிவு வெளியாகவில்லை.
இதற்கிடையில், ஈரானின் தலைமை மதகுரு மோஜ்தபா கமேனி உடல்நலத்துடன் இருப்பதாகவும் இலாஹி தெரிவித்துள்ளார். முன்னாள் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கு மற்றும் ஈரானில் நடைபெற்ற போராட்டங்களில் மோஜ்தபா கமேனி பங்கேற்றதாகவும் அவர் கூறியுள்ளார்.
