"ஈரான் இன்னும் போதுமான வலியை உணரவில்லை" – ட்ரம்ப் எச்சரிக்கை!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரான் மீது அமெரிக்கப் படைகள் தொடர்ந்து 13-வது நாளாக வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஊடகங்களுக்கு அளித்துள்ள தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
ஈரான் மீதான தொடர் தாக்குதல்கள் குறித்துப் பேசிய டிரம்ப், "ஈரான் இன்னும் போதுமான வலியை உணரவில்லை" எனக் குறிப்பிட்டுள்ளார். ஈரான் மீதான தாக்குதல்களை மேலும் தீவிரப்படுத்தி, இதுவரை இல்லாத அளவிலான மிகப்பெரிய ராணுவத் தாக்குதலை நடத்துவது குறித்துத் தீவிரமாகப் பரிசீலித்து வருவதாகவும், அதற்கான முடிவு மிக விரைவில் எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
ஏமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செங்கடலில் சவுதி அரேபியாவின் இரண்டு எண்ணெய் டாங்கர் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் மேலும் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்:
ஹவுதி அமைப்பினர் ஈரானின் நிழல் அமைப்பாகச் செயல்பட்டு வருவதாகச் சுட்டிக்காட்டிய டிரம்ப், அவர்கள் செங்கடலில் வணிகக் கப்பல்கள் மீது மீண்டும் தாக்குதல் நடத்தினால் அதற்கு ஈரானே முமுப் பொறுப்பேற்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
ஹவுதிகளோ அல்லது ஈரானோ மீண்டும் இதுபோன்ற தாக்குதல்களில் ஈடுபட்டால், இரு தரப்பும் வரலாறு காணாத கடுமையான ராணுவத் தண்டனையைச் சந்திக்க நேரிடும் எனத் தனது 'டிரூத் சோஷியல்' தளத்தில் பதிவிட்டுள்ளார்.
