'கமேனி கொலைக்குப் பழி தீர்ப்போம்' - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஈரான் பகிரங்கப் போர் மிரட்டல்!

 
கமேனி

ஈரானின் உச்ச தலைவராகப் பொறுப்பேற்றிருந்த அயத்துல்லா மொஜ்தபா கமேனி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அதற்குப் பழிவாங்காமல் ஈரான் ஓயாது என அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த விவகாரத்தால் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நேரடிப் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

அயத்துல்லா மொஜ்தபா கமேனியின் மரணத்திற்குப் பின்னணியில் இருக்கும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளைக் கடுமையாகச் சாடியுள்ள ஈரான் அரசு, இதற்கான விலையை இரு நாடுகளும் அனுபவித்தே தீர வேண்டும் என எச்சரித்துள்ளது. கமேனி கொல்லப்பட்டதற்கு உரிய நேரத்தில், யாரும் எதிர்பார்க்காத வகையில் மிகக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

ஈரான் முன்னாள் உச்ச தலைவர் அலி கமேனி

இந்த உக்கிரமான பழிவாங்கல் நடவடிக்கை என்பது ஈரானின் ஒட்டுமொத்த நாட்டு மக்களின் கோரிக்கையும், தங்களது முதன்மையான தேசியக் கடமையாகும் என்றும் ஈரான் பாதுகாப்புத் துறை குறிப்பிட்டுள்ளது.

ஈரான் தரப்பிலிருந்து எந்த நிமிடத்திலும் அணு ஆயுதத் தாக்குதலோ அல்லது ஏவுகணைத் தாக்குதலோ வரலாம் என்பதால், அமெரிக்கா தனது மத்திய கிழக்கு நாட்டுப் படைப்பிரிவுகளை முழுமையான போர் தயார் நிலைக்கு மாற்றியுள்ளது. ஈரானின் இந்த மிரட்டலுக்குப் பதிலடி கொடுத்துள்ள அமெரிக்கா, தங்கள் நாட்டின் மீதோ அல்லது தங்களின் நட்பு நாடான இஸ்ரேல் மீதோ ஈரான் ஏதேனும் தாக்குதலை முன்னெடுத்தால், அது ஈரானின் ஒட்டுமொத்த அழிவிற்கே வழிவகுக்கும் என்றும், முன்னெப்போதும் இல்லாத அளவிற்குக் கடுமையான எதிர்விளைவுகளை ஈரான் சந்திக்க நேரிடும் என்றும் மிகக் காட்டமாக எச்சரித்துள்ளது.

கமேனி

ஏற்கனவே இஸ்ரேல் - காசா மற்றும் லெபனான் மோதல்களால் போர்க்களமாகக் காட்சியளிக்கும் மத்திய கிழக்கில், தற்பொழுது ஈரானின் இந்த நேரடிப் போர் முழக்கம் உலக நாடுகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.