ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் கப்பல்களிடம் ரூ.18 கோடி கட்டணம் வசூலிக்க ஈரான் முடிவு!

 
ஹார்முஸ்  கப்பல் ஹார்முஸ்  கப்பல்

மேற்காசியாவில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், உலக நாடுகளின் எரிசக்தி விநியோகத்தில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் ஹார்முஸ் ஜலசந்தி தொடர்பாக ஈரான் எடுத்துள்ள புதிய முடிவு உலக நாடுகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் கடும் எச்சரிக்கையையும் மீறி, ஹார்முஸ் ஜலசந்தியைக் கடக்கும் கப்பல்களுக்குப் பெரும் தொகையைச் சுங்கக் கட்டணமாக வசூலிக்க ஈரான் முடிவு செய்துள்ளது.

ஈரான் நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்புக் குழு உறுப்பினர் அலாயுதீன் புருஜெர்டி தெரிவித்துள்ளபடி, ஜலசந்தியைக் கடக்கும் ஒவ்வொரு கப்பலும் சுமார் 2 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ₹18.8 கோடி) கட்டணமாகச் செலுத்த வேண்டும். இந்தப் போர்ச் சூழலில் நாட்டின் பொருளாதாரத்தைச் சமாளிக்கவும், ஈரானின் அதிகாரத்தை உலகிற்குப் பறைசாற்றவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பாதையைப் பாதுகாப்பான வழித்தடமாகப் பயன்படுத்த ஈரான் வழங்கும் 'பாதுகாப்பு சேவைக்கான வரி' என்றும் இது அழைக்கப்படுகிறது.

கப்பல்

அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த சனிக்கிழமை அன்று விடுத்த எச்சரிக்கையில், "ஹார்முஸ் ஜலசந்தியை 48 மணி நேரத்திற்குள் எந்தவித நிபந்தனையுமின்றி முழுமையாகத் திறக்க வேண்டும். தவறினால், ஈரானின் மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி அவற்றை நிர்மூலமாக்கும்" என்று கெடு விதித்திருந்தார். இந்த 48 மணி நேரக் கெடு இன்றுடன் முடிவடைவதால், அமெரிக்கா தாக்குதலைத் தொடங்குமா என்ற அச்சம் உலக நாடுகளிடையே எழுந்துள்ளது.

ஹார்முஸ் நீரிணை ஈரான் போர் கப்பல்

ஈரானின் 'எதிரி நாடுகளான' அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் தொடர்புடைய கப்பல்களுக்குத் தடை நீடிக்கிறது. நட்பு நாடுகள் மட்டும் பாதுகாப்பு ஒருங்கிணைப்புடன் செல்ல அனுமதிக்கப்படும். பிப்ரவரி 28ம் தேதி நடந்த தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டதை ஈரான் உறுதி செய்துள்ளது. இதுவே தற்போதைய தீவிர மோதலுக்கு முதன்மைக் காரணமாகும். உலக கச்சா எண்ணெய் போக்குவரத்தில் 20% இந்தப் பாதை வழியாகவே நடக்கிறது. ஈரானின் இந்த ₹18 கோடி கட்டண விதிப்பு, கச்சா எண்ணெய் விலையை மேலும் உயர்த்தும் எனக் கருதப்படுகிறது.