உலக நாடுகளுக்கு ஈரான் செக்.. ஹார்முஸ் நீரிணையில் இனி புதிய கட்டணம் - மசோதாவை தயாரித்த ஈரான்!
ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் இடையே நீடித்து வரும் போர் சூழல், தற்போது உலகளாவிய பொருளாதார நெருக்கடியாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக, ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளதும், அங்கு புதிய கட்டண முறையைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளதும் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச நாடுகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும், ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்துக் கப்பல்களுக்கும் கட்டணம் வசூலிக்கும் புதிய சட்ட மசோதாவை ஈரான் அரசு தயாரித்துள்ளது. இது உலகளாவிய எரிபொருள் விலையில் மேலும் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.

கடந்த மாதம் 28ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய கூட்டுத் தாக்குதலில், அந்நாட்டின் உச்சபட்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி மற்றும் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதற்குப் பழிவாங்கும் விதமாக, கடந்த 26 நாட்களாக ஈரான் தீவிரப் போரில் ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியது.
தற்போது ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது குறித்து ஆலோசித்து வரும் ஈரான், ஒரு நிபந்தனையை முன்வைத்துள்ளது. இனி இந்த நீரிணை வழியாகச் செல்லும் அனைத்து நாடுகளின் வணிகக் கப்பல்களும் ஈரானுக்குக் குறிப்பிட்ட தொகையைக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

"ஒரு நாட்டின் எல்லை வழியாகப் பொருட்கள் கடந்து செல்லும்போது அதற்குக் கட்டணம் வசூலிப்பது சர்வதேச அளவில் இயல்பான நடைமுறைதான்" என ஈரான் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள இந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.உலகின் 25 சதவீத கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் இந்த ஹார்முஸ் நீரிணை வழியாகவே நடைபெறுகிறது.
ஏற்கனவே சீனா, ஜப்பான், பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்காளதேசம் போன்ற ஆசிய நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. எரிபொருள் தட்டுப்பாட்டால் பல நாடுகளின் உற்பத்தித் துறை முடங்கி, பொருளாதாரப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வரவும், ஹார்முஸ் நீரிணையைத் தடையின்றி இயக்கவும் பல நாடுகள் ஈரான் மற்றும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
ஈரானின் இந்த அதிரடி மசோதா நிறைவேற்றப்பட்டால், சர்வதேசக் கடல்வழிப் போக்குவரத்தில் புதிய சிக்கல்கள் உருவாகும் எனக் கப்பல் போக்குவரத்து நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளன.
