“தாக்குதலை நிறுத்தாமல் பேச்சுவார்த்தையில் பங்கேற்க மாட்டோம்” - ஈரான் உறுதி.. மீண்டும் போர் பதற்றம்!
மத்திய கிழக்கு ஆசியாவில் நிலவும் போர்ச் சூழலைத் தணிக்க உலக நாடுகள் எடுத்து வரும் முயற்சிகளுக்குப் பலத்த அடி விழுந்துள்ளது. லெபனான் மீது இஸ்ரேல் நடத்தி வரும் கொடூரத் தாக்குதலை நிறுத்தாதவரை, அமெரிக்காவுடன் எவ்வித பேச்சுவார்த்தையிலும் ஈடுபடப் போவதில்லை என ஈரான் இன்று அதிரடியாக அறிவித்துள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடுத்த 40 நாள் போர், கடந்த 7-ஆம் தேதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் மேற்கொண்ட மத்தியஸ்தத்தின்படி, லெபனான் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் தாக்குதல் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், "போர் நிறுத்த ஒப்பந்தத்தில் லெபனான் சேர்க்கப்படவில்லை" எனக் கூறி, அங்குள்ள ஹிஸ்புல்லா அமைப்பினரைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 250-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

இன்று பாகிஸ்தானில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற இருந்த நிலையில், ஈரான் தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளது. இது குறித்து ஈரானின் 'பார்ஸ்' செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்களில், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஈரான் குழு ஏற்கனவே பாகிஸ்தான் சென்றடைந்துவிட்டதாக வெளியான தகவல்களில் உண்மை இல்லை. லெபனானில் போர் நிறுத்தம் ஏற்படும் வரை, பாகிஸ்தானில் அமெரிக்கத் தரப்புடன் எவ்வித அமைதிப் பேச்சுவார்த்தையிலும் பங்கேற்கும் திட்டம் ஈரானுக்கு இல்லை.
இது குறித்து ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் கூறுகையில், "நாங்கள் வழங்கிய 10 அம்ச நிபந்தனைகளில் லெபனானும் ஒரு ஒருங்கிணைந்த பகுதி. அதில் எந்த மாற்றமும் செய்ய முடியாது. லெபனானில் போர் நிறுத்தத்தை உறுதி செய்வதற்கான காலம் கடந்து கொண்டிருக்கிறது. சண்டையை நிறுத்துவதில் தாமதம் ஏற்பட்டால் நிலைமை மேலும் மோசமாகும்" என எச்சரித்துள்ளார்.

இஸ்ரேலின் தாக்குதலுக்குப் பதிலடியாக, ஏற்கனவே திறக்கப்பட்ட ஹார்முஸ் நீரிணையை ஈரான் மீண்டும் மூடியுள்ளது. அமெரிக்கா தனது உறுதிமொழியை நிறைவேற்றாத வரையிலும், இஸ்ரேல் தனது தாக்குதல்களைத் தொடரும் வரையிலும் பேச்சுவார்த்தைகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளன என ஈரானின் 'தஸ்னிம்' செய்தி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் அமைதி குறித்துத் தெளிவாகக் கூறிய பிறகும், இஸ்ரேல் தாக்குதல் நடத்துவது ஈரானை கடும் கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இதனால் நாளை நடைபெறவிருந்த அமைதிப் பேச்சுவார்த்தை ரத்தாகும் சூழல் உருவாகியுள்ளது, இது உலக நாடுகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
