"ஒரு சொட்டு எண்ணெய் கூட ஏற்றுமதி செய்ய முடியாது" - ஈரான் கடும் எச்சரிக்கை!
அமெரிக்காவின் புதிய பொருளாதாரத் தடைகளுக்குப் பதிலடியாக, வளைகுடா நாடுகளில் இருந்து ஒரு சொட்டு கச்சா எண்ணெய் கூட ஏற்றுமதி செய்ய முடியாதபடி முடக்குவோம் என ஈரான் அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, உலகளவில் 30 சதவீதத்திற்கும் அதிகமான எரிபொருள் விநியோகத்திற்குப் பயன்படும் முக்கிய கடல் பாதையான ஹார்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் அறிவித்தது. கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வரும் இந்தப் பிரச்சினையில், ஹார்முஸ் நீரிணையைக் கைப்பற்ற அமெரிக்கா மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்ததாகக் கூறப்படுகிறது.

ஈரானின் பொருளாதார வாழ்வாதாரத்தை முடக்கும் வகையில் அமெரிக்கா 'Economic D-Day' என்ற பெயரில் புதிய தடைகளை விதிக்க திட்டமிட்டுள்ள நிலையில், ஈரானிடம் இருந்து இந்த அதிரடி மிரட்டல் வந்துள்ளது.
ஹார்முஸ் நீரிணை வழியே பயணிக்கும் போது விதிமுறைகளை மீறும் கப்பல்களுக்குக் கடுமையான அபராதம், சிறைபிடித்தல் மற்றும் கப்பல்களைப் பறிமுதல் செய்தல் போன்ற தண்டனைகள் விதிக்கப்படும் என ஈரான் அறிவித்துள்ளது. விதிகளை மீறும் கப்பல்கள் உடனடியாகக் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படும் என்றும், அந்தச் சர்ச்சைக்குரிய கப்பல்களுடன் வர்த்தகத் தொடர்பு வைக்கும் பிற நிறுவனங்களின் கப்பல்களும் கறுப்புப் பட்டியலில் இணைக்கப்படும் என்றும் ஈரான் அரசு எச்சரித்துள்ளது.
