மேற்காசியப் போரில் திருப்புமுனை: யுரேனியத்தை ஒப்படைக்க ஈரான் சம்மதம் - ட்ரம்ப் தகவல்!

 
trump trump


மேற்காசியாவில் கடந்த ஆறு வாரங்களாக நீடித்து வரும் போர் பதற்றத்தைத் தணிக்கும் வகையில், ஈரான் தனது செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஒப்படைக்க முன்வந்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த டிரம்ப், ஈரானுடனான அமைதி பேச்சுவார்த்தையில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

“ஈரான் தன்னிடம் உள்ள ‘அணு குப்பைகளை’ எங்களிடம் வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. ஈரான் ஒருபோதும் அணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம், அதற்கு அவர்கள் தற்போது உடன்பட்டுள்ளனர்” என்றார்.இந்த ஒப்பந்தம் இறுதியானால், எண்ணெய் விநியோகம் சீராகும் என்றும், மூடப்பட்டுள்ள ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

“ஒப்பந்தம் பாகிஸ்தானில் கையெழுத்தாகும் பட்சத்தில், நான் அந்நாட்டிற்குச் செல்லக்கூடும். பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் ராணுவ தளபதி ஆசிம் முனீர் ஆகியோர் இந்தப் பேச்சுவார்த்தையில் சிறந்த பங்காற்றி வருகின்றனர்,” என டிரம்ப் பாராட்டு தெரிவித்தார்.

தற்போது அமலில் உள்ள 2 வார காலப் போர்நிறுத்தத்தை நீட்டிக்க வேண்டிய அவசியம் இருக்காது என்றும், அதற்குள்ளாகவே இறுதி ஒப்பந்தம் எட்டப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.ஈரான் அணு ஆயுதப் பாதையைக் கைவிடச் சம்மதித்துள்ளதாக டிரம்ப் கூறியிருப்பது, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது. அதே நேரத்தில், இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே இன்று முதல் 10 நாட்கள் போர்நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளதும் இப்பிராந்தியத்தில் அமைதிக்கான நம்பிக்கையை அதிகரித்துள்ளது.