அமெரிக்காவுடனான அடுத்த சுற்று பேச்சுவார்த்தை பாகிஸ்தானில் திங்கட்கிழமை நடைபெறும் - ஈரான் தகவல்!
முந்தைய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் ஈரான் மீது அமெரிக்கா கடல்வழி முற்றுகையைத் தீவிரப்படுத்தியுள்ள சூழலில், வரும் திங்கட்கிழமை (ஏப்ரல் 20) மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கவுள்ளதாக ஈரான் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. கடந்த வாரம் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் உள்ள செரீனா ஓட்டலில் 21 மணி நேரம் நீண்ட முதற்கட்டப் பேச்சுவார்த்தை எவ்வித உடன்பாடும் இன்றி முடிவடைந்தது.
அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் மற்றும் ஈரான் சபாநாயகர் முகமது பாகர் காலிப் தலைமையிலான குழுவினர் இதில் பங்கேற்றனர். பேச்சுவார்த்தை தோல்வி என அறிவித்துவிட்டு வான்ஸ் நாடு திரும்பியதால், ஈரானியத் துறைமுகங்களை அமெரிக்கா முற்றுகையிட்டது. இதனால் போர் பதற்றம் மீண்டும் அதிகரித்தது.
தற்போது முறிந்த பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கப் பாகிஸ்தான் அரசு தீவிரமான முயற்சிகளை எடுத்து வருகிறது. ஈரானிய சபாநாயகர் முகமது பாகர் காலிப் மற்றும் பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசீம் முனீர் ஆகியோருக்கு இடையே நேற்று முன்தினம் நடைபெற்ற சந்திப்பு, இந்தப் புதிய பேச்சுவார்த்தைக்கு அடித்தளமாக அமைந்துள்ளது.

கத்தார் எமிர் ஷேக் தமீம் மற்றும் துருக்கி அதிபர் எர்டோகன் ஆகியோர் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை சந்தித்து, மேற்காசியப் பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட சர்வதேச ஒத்துழைப்பை வலியுறுத்தியுள்ளனர்.நாளை ஞாயிற்றுக்கிழமை இரு நாடுகளின் உயர்மட்டக் குழுவினரும் மீண்டும் இஸ்லாமாபாத் வருகை தரவுள்ளனர். முற்றுகையைத் தளர்த்துவது, அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான இணக்கமான சூழலை உருவாக்குவது மற்றும் நிரந்தரப் போர் நிறுத்தத்தை எட்ட இந்தச் சுற்றுப் பேச்சுவார்த்தை உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
