இந்தியர்கள் ஈரானுக்கு போகாதீங்க... மத்திய அரசு அதிரடி எச்சரிக்கை!
ஈரான் நாட்டில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்புச் சூழலைக் கருத்தில் கொண்டு, இந்தியக் குடிமக்கள் யாரும் அந்த நாட்டுக்குப் பயணம் செய்ய வேண்டாம் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவி வரும் மோதல் போக்கு எப்போது வேண்டுமானாலும் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே அங்குள்ள இந்தியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

குறிப்பாக ஈரான் வான்வெளியில் ஏற்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மற்றும் விமானப் போக்குவரத்து ரத்து போன்ற காரணங்களால் இந்தியர்கள் அங்குச் செல்வது பாதுகாப்பானது அல்ல எனத் தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது ஈரானில் தங்கியுள்ள மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் வர்த்தகர்கள் உடனடியாக தங்களைப் பற்றிய விவரங்களை இந்தியத் தூதரகத்தில் பதிவு செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மேலும் அங்குள்ளவர்கள் தரைவழி எல்லைகள் மூலமாகப் பாதுகாப்பான நாடுகளுக்குத் திரும்பத் தேவையான ஆலோசனைகளையும் அரசு வழங்கி வருகிறது.

இந்த இக்கட்டான சூழலில் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தேவையான அனைத்து அவசர கால உதவி எண்களையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அங்குள்ள இந்தியர்கள் போராட்டங்கள் நடைபெறும் இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் உள்ளூர் ஊடகச் செய்திகளைத் தொடர்ந்து கவனிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். ஈரானில் நிலவும் அசாதாரண சூழ்நிலை சீரடையும் வரை இந்த பயணத் தடை அமலில் இருக்கும் என்பதால் வெளிநாடு செல்லத் திட்டமிட்டிருப்பவர்கள் தங்கள் முடிவை ஒத்திவைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
