ஈரானில் உள்ள தமிழர்களுக்கு தமிழ்நாடு அரசு அவசர உதவி எண்கள் அறிவிப்பு!

 
ஈரான் ஈரான்

இஸ்ரேல் நாட்டின் திடீர் தாக்குதலால் ஈரான் முழுவதும் ஒருவித பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் அங்கு வேலை நிமித்தமாகவும், கல்வி பயிலவும் சென்று தங்கியிருக்கும் இந்தியர்கள் மற்றும் தமிழர்களின் பாதுகாப்பு குறித்த கவலை எழுந்துள்ளது. இந்த அசாதாரண சூழலைக் கருத்தில் கொண்டு, அங்குள்ள தமிழர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யத் தமிழ்நாடு அரசு பல்வேறு அதிரடி பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

பாதிப்பிற்குள்ளான ஈரானில் வாழும் தமிழர்கள் மற்றும் அவர்களின் தமிழ்நாட்டில் உள்ள குடும்பத்தினர் அவசர உதவி பெற எண்களை அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி 1800 309 3793, +91 8069009901, 08069009901 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்பு கொண்டு தேவையான உதவிகளை உடனடியாகப் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்கள் மூலம் தமிழர்கள் தங்களின் தற்போதைய நிலவரங்களை அரசுக்குத் தெரிவிக்க முடியும்.

அயலகத் தமிழர் நலத்துறை மூலமாக இந்த அவசர உதவிகள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன. ஈரானில் இருந்து சொந்த ஊர் திரும்ப விரும்பும் தமிழர்களைப் பாதுகாப்பாக மீட்டுத் தாயகம் அழைத்து வர தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மத்திய வெளியுறவு அமைச்சகத்துடன் இணைந்து மாநில அரசு தீவிரமாகச் செய்து வருகிறது. அரசின் இந்த துரித நடவடிக்கை தமிழகத்தில் உள்ள அவர்களது உறவினர்களுக்கு நிம்மதியைத் தந்துள்ளது.