வான்பரப்பை மூடிய ஈரான்... உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள் முழுமையாக ரத்து

 
iran iran

மத்திய கிழக்கு நாடுகளில் இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே மாறி மாறி நடத்தப்படும் தாக்குதல்களால் தற்பொழுது போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அண்மையில் லெபனானில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பின் மீது இஸ்ரேல் கடுமையான தாக்குதலை நடத்தியது. இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் நாட்டின் மீது ஈரான் நேற்று இரவு ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியதால் அங்கு அசாதாரணமான சூழல் நிலவுகிறது.

இரு நாடுகளும் தீவிரமாக மோதி வரும் நிலையில், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈரான் தனது நாட்டின் வான்பரப்பை முழுமையாக மூடியுள்ளது. இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் இயக்கப்படும் அனைத்து உள்நாட்டு மற்றும் சர்வதேச வெளிநாட்டு விமான சேவைகளையும் தற்காலிகமாக ரத்து செய்து அந்நாட்டு அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது. இதனால் வளைகுடா நாடுகளுக்கான வான்வழிப் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்துள்ளது.

மறுபுறம் இஸ்ரேல் நாட்டிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு, அங்குள்ள பள்ளிகளுக்கு அடுத்த 2 நாட்களுக்குத் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளின் இந்த அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகளால் ஒட்டுமொத்த மத்திய கிழக்கு பகுதியிலும் பெரும் பரபரப்பும் போர் பயமும் நிலவி வருகிறது. நிலைமை சீரான பின்பு தான் மீண்டும் விமானங்கள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.